எதிர்பாராத விதமாக பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, வடக்கு மக்களுக்கு பாதுகாப்பதற்காகவே அங்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் உள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இராணுவ பேச்சாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”முப்படையினர், அதிரடிப்படையினர், பொலிஸார் அனைவரும், ஜாதி, மதம், குலம், பேதம் என பாகுபாடு காட்டி சேவை செய்வதில்லை. வடக்கு மக்கள் மாத்திரமல்ல, யாராக இருந்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரென்பதை இனங்கண்டு, அவர்களை முதலில் பாதுகாப்பதே எமது நோக்கம். இவர்கள் கேட்பது போன்று இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அகற்றிவிட்டு, அம் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நாம் எங்கிருந்து உதவுவது?
இதற்கு சிறந்த உதாரணம், அரநாயக்க மண்சரிவு. அரநாயக்க மண்சரிவு ஏற்பட்டபோது, கேகாலையில் இராணுவ முகாம் இருந்த காரணத்தாலேயே எம்மால் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட முடிந்தது. அவ்வாறு ஒரு இராணுவ முகாம் அங்கு இருந்திருக்காவிட்டால், வேறு ஒரு இடத்திலிருந்து செல்லவேண்டும். அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவற்றையெல்லாம் முடித்து அங்கு செல்லும்போது அதிக நேரம் செல்லும். பாதிப்பும் அதிகமாகிவிடும். நாம் வடக்கு, தெற்கு என்று பாகுபாடு பார்ப்பதில்லை. மக்களது பாதுகாப்பினை கருத்திற்கொண்டே எமது நடவடிக்கைகள் தொடர்கின்றன” என்றார்.