வடமாகாணத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சகல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (18) விஜயம் செய்த வடமாகாண முலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம், வடமாகாணத்தில் போதைப்பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். மத்திய அரசாங்கத்தின் கீழ் தனியான பிரிவு ஒன்றும் இருக்கின்றது. அதனுடன் இணைந்தும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
பொலிஸாருடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களை அடையாளப்படுத்தி வருகின்றோம். மக்களுடைய உதவியும், ஒத்துழைப்பும் இருந்தால் தான் போதைப்பொருளை கட்டுப்படுத்தலாம் என்றார்.