மக்களுக்கு நிவாரணமளிக்கும் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும்!!

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும். எனவே தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அரசினையும் அரச பிரதிநிதிகளான வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர்கள், பொலிஸார் மற்றும் முப்படைகளையும் யாழ்.ஊடக அமையம் கோரி நிற்கிறது.

இது தொடர்பில் யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை முழுவதும் கோரோனோ வைரஸ் தாக்கம் தொடர்பிலான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் முடுக்கிவிடப்பட்டுள்ள அதேவேளை, அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களை முற்றாக வீடுகளிற்குள் முடக்கிவிட்டுள்ளது.

அரசினது இத்தகைய அறிவிப்பிற்கு வடக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல.ஆனாலும் மக்களை வீடுகளுள் இருக்குமாறு அரசு அறிவித்துவருகின்ற போதும் வீடுகளுள் அகப்பட்டிருக்கும் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களது நிலை நாளுக்கு நாள் மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அரசினது அறிவிப்புக்களும் அரச அதிகாரிகளது அறிவிப்புக்களும் வெறுமனே அறிக்கைகளாகவும் புள்ளிவிவரங்களாகவும் இருக்கின்ற போதிலும் யதார்த்தத்தில் மக்களிற்கு இன்று வரை நிவாரணங்கள் எதுவுமே கிட்டியிருக்கவில்லையென்பதே உண்மையாக இருந்து வருகின்றது.

மக்களை வீடுகளினுள் முடங்கியிருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்ட நாள் முதலே அன்றாடங்காய்ச்சிக் குடும்பங்களிற்கு நிவாரணம் வழங்குவது பற்றிய அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டே வருகின்றது.

ஆனாலும் அவையெல்லாம் வெறும் ஊடகங்களிற்கான அறிக்கைகளாக அரசினாலும் அதிகாரிகளாலும் வெளியிடப்படும் தகவலாக உள்ளதேயன்றி யதார்த்தத்தில் ஏதும் கிட்டாதேயுள்ளது.
குறிப்பாக சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களிற்கு ஆகக்குறைந்தது கடன் முற்பணத்தை வழங்க போவதாக சொன்ன அதிகாரிகளது உறுதி மொழி கூட பெரும்பாலான இடங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமது அன்றாட ஒருவேளை உணவிற்காக போராடும் மக்களது தேவைகளை நிறைவேற்ற பாடுபடும் தன்னார்வ உதவி அமைப்புக்கள் மற்றும் இளம் சமூகத்தின் பணிகளட வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத ஒன்றாக தற்போதைய சூழலில் உள்ளது.

உதவி கோரப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தேடிச்சென்று மக்களது வீடுகள் தோறும் இத்தகைய தரப்புக்கள் தமது அர்ப்பணிப்பு மிக்க சேவையினை வழங்கிவருகின்றன.

இத்தகைய உதவிகள் மக்களது மனதில் நம்பிக்கையினையும் தமது வீடுகளுள் தங்கியிருக்க வேண்டிய சூழலின் நியாயத்தை வலியுறுத்துவதாகவும் இருந்து வருகின்றது.

யாழ்.ஊடக அமையமும் தன்னிடம் வருகின்ற உதவிக்கோரிக்கைகளை இத்தகைய தன்னார்வ உதவி அமைப்புக்கள் ஊடாகவே மக்களிற்கு பெற்று வழங்கிவருகின்றது.

ஆனாலும் இத்தகைய உதவிகளை வழங்கும் தரப்புக்களை இலக்கு வைத்து கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அத்தகைய உதவிகள் கூட அன்றாடங்காய்ச்சி குடும்பங்களை சென்றடைய முடியாத சூழலை தோற்றுவித்துள்ளது.

நேற்றைய தினம் கொடிகாமத்தில் இவ்வாறான தன்னார்வ உதவியாளர்கள் நால்வர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தீவுப்பகுதிகளிற்கு உதவிகளை வழங்கிய பின்னர் யாழ்ப்பாணம் நகரப்பகுதிக்கு திரும்பியவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.ஆயினும் அவர்களிடம் படை சிவில் நிர்வாக அலுவலகம் வழங்கிய அனுமதி இருந்த போதும் சோதனை சாவடியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
பலத்த சிரமங்களின் பின்னராகவே அவர்களால் இரவு வீடு திரும்ப முடிந்திருந்தது.

மக்களை வீடுகளுள் முடங்கியிருக்குமாறு கோரப்படுவதன் நியாயம் எவ்வளவு மறுக்கப்படமுடியாததொன்றோ அதே போன்று அவர்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றுவதுமாகும்.

அரசு ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போன்று நிவாரணப்பொருட்களை வீடு தேடி சென்று விநியோகிக்கும் வரையிலேனும் பட்டினி சாவிலிருந்து மக்களை காப்பாற்ற இத்தகைய தன்னார்வ தரப்புக்களது சேவை தேவையாகவுள்ளது.

யதார்த்த நிலையினை புரிந்து இத்தகைய தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அரசினையும் அரச பிரதிநிதிகளான வடமாகாண ஆளுநர்,மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களையும் காவல்துறை மற்றும் முப்படைகளையும் யாழ்.ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்துமென்பதை சுட்டிக்காட்டவும் யாழ்.ஊடக அமையம் விரும்புகின்றது- என்றுள்ளது.

Related Posts