மக்களுக்காகவே அரசு, அரசுக்காக மக்கள் இல்லை – அங்கஜன்

angajan-pasil (1)மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமக்கு வாக்களியுங்கள், தாம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்று போலி வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் சொல்லிச் சொல்லியே எம்மக்களை பலர் ஏமாற்றி விட்டனர். மக்களை ஏமாற்றி தமது அரசியல் இருப்பை உறுதி செய்தனரே தவிர மக்களது வாழ்வுக்காக எதையுமே அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. வெறுமனே ஏமாற்றங்களை மட்டுமே கடந்த 60 வருட காலங்களாக எம்மக்களுக்கு அவர்களால் கொடுக்க முடிந்தது. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 07.09.2013 சனிக்கிழமையன்று புத்தூர் கலைமதி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

angajan-pasil (8)

யாழ் குடாநாட்டில் முதல் தடவையாக மூன்று பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்த இந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று இந்த இடத்திலிருந்து பேசுவதற்கு நான் பெரும் மகிழ்சியடைகின்றேன். ஏனென்றால் கடந்த காலங்களில் இப்பகுதி மக்களை நான் நேரில் பல தடவை சந்தித்திருக்கின்றேன். இந்த பகுதி மக்கள் என்னோடு நன்றாக தொடர்பு கொண்டவர்கள். அது மட்டுமன்றி புத்தூருக்கு நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஊர் தரைத்தோற்றத்திலும் உயர்ந்த இடமாகும். அத்தோடு குடாநாட்டிற்கே குடி நீர் கொடுக்கும் இரண்டு வற்றாத கிணறுகளை கொண்டிருக்கின்றது. கடினமான தரையில் வாழ்ந்தாலும் மென்மையான மனதுக்காரர்களாக இந்த ஊர் மக்கள் கடினமான உழைப்பால் முன்னேற்றத்தை தொட்டவர்கள். மக்களுக்கு நல்லதை செய்பவர்களை தலைவர்களாக்கி மகிழும் இந்த புத்தூர் வாழ் மக்களின் முன்னால் பேசுவது மிகவும் மகிழ்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்னைய காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வந்த நான், தேர்தலுக்கு பின்னராக எனது மக்களை ஏமாற்றாமல் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்திலேயே இருந்து இப்பகுதி இளைஞர்களின் அபிவிருத்திக்காகவும், மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், அவர்களின் சுய அபிவிருத்திக்காகவும், பிரதேச அபிவிருத்திக்காகவும் எனது முழுமையான பங்களிப்பை செய்து வருகின்றேன்.

உங்களுக்கு தெரியும், வருகின்ற மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 27 வருடங்களுக்கு பின்னதாகவும், முதல் முறையாகவும் எல்லோரும் மாகாண சபைக்காக வாக்களிக்கப் போகின்றோம். இந்த வாய்ப்பை எங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் தந்திருக்கின்றார். இதற்கு முன்னர் யாராவது இத்தகைய வாய்ப்பை தந்தார்களா? எந்த அரசாங்கங்களும், எந்த ஆட்சியும் தராத இந்த வாய்ப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணணி அரசாங்கம் வழங்கியிருக்கின்றது.

இந்த தேர்தலின் ஊடாக எங்களுக்கு சுயநிர்ணயம் கிடைக்கப் போகின்றது. எங்களுடைய மக்களை நாமே ஆட்சி செய்யலாம். எந்த அமைச்சரும் கொழும்பில் இருந்து வந்து உதவிகளை செய்ய வேண்டியிருக்காது. நீங்களும் அவர்களை தேடி அங்கும் செல்ல வேண்டியிருக்காது. ஏனென்றால் உங்களது மாகாண சபைக்கான அமைச்சர்களே உங்களுக்கான தேவைகளையும், அபிவிருத்திகளையும் செய்து தருவார்கள். இந்த வாய்ப்பை மக்களுக்காக மாகாண சபைக் கட்டமைப்பு தந்திருக்கின்றது.

பலர் இந்தத் தேர்தலில் உரிமைகள், சுயநிர்ணயம், தேசியம் பற்றியெல்லாம் பேசுகின்றார்கள். இதைத்தான் 60 வருடங்களாக பேசிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் மக்களே இந்த தேர்தல் உண்மையில் அபிவிருத்திக்கான தேர்தல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அபிவிருத்தி என்ற உரிமையையும் எம்மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாகாண சபையை வடக்கு மக்களுக்கும் வழங்குவதற்கு நாம் வந்திருக்கின்றோம். அதற்காக நாம் எமக்கு உரிமை வேண்டாம், சுயநிர்ணயம் வேண்டாம், தேசியம் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. அபிவிருத்தியின் ஊடாக எம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டே எமது உரிமைகளுக்காகவும் போராட வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம்.

யதார்த்தமான அரசியல் அணுகுமுறையே எமக்கும் எம் எதிர்கால விருத்திக்கும் தேவை. வெறுமனே அறிக்கைகளையும், எதிர்ப்பு கோசங்களையும் கொடுத்துக் கொண்டு மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமக்கு வாக்களியுங்கள், தாம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்று போலி வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் சொல்லிச் சொல்லியே எம்மக்களை பலர் ஏமாற்றி விட்டனர். மக்களை ஏமாற்றி தமது அரசியல் இருப்பை உறுதி செய்தனரே தவிர மக்களது வாழ்வுக்காக எதையுமே அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஏன்? சிந்தித்து பாருங்கள் மக்களே. இதுவரை காலமும் எந்த விதமான பயனும் இல்லாத எதிர்ப்பரசியலுக்கு ஆதரவளித்து நாம் எதை சாதித்தோம்? எவற்றை பெற்றோம்? வெறுமனே ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்தன.

நாம் மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு எதிரானவர்கள். மக்களுக்காகவே அரசு, அரசுக்காக மக்கள் இல்லை என்பதை கொள்கையாக கொண்டவர்கள். மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அபிவிருத்திகளும் எவ்வித தடைகளும் இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அந்த உறுதியை கடந்த காலங்களில்; குடாநாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் என்னால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், வாழ்வாதார நலத்திட்ட உதவிகள், பிரதேச அபிவிருத்திகள் போன்ற அனைத்தும் வெளிப்படுத்தி நிற்கின்றன. வெறுமனே மாவட்ட அமைப்பாளனாக இருந்து கொண்டே இவற்றையெல்லாம் சாதித்த என்னால், மக்கள் பிரதிநிதியாகி, அதிகாரங்கள் உள்ள பதவியோடு இருந்தால் இன்னும் ஏராளமானவற்றை சாதித்துக் காட்ட முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எனவே மக்களே, ஏனைய மாகாண மக்கள் அனுபவித்த மாகாண சபை இம்முறை உங்களுக்கும் கிடைக்கவிருக்கின்றது. உங்களுக்கு கிடைக்கின்ற இந்த முதலாவது மாகாண சபையினை உங்களுக்கான அபிவிருத்திக்கான வாய்ப்பாக பயன்படுத்த தயாராகுங்கள். இது உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யவிருக்கும் மிகப் பெரிய உதவியாகவிருக்கும். எனவே சிந்தித்து, மாற்றத்திற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைவோம். எதிர்வரும் 22ம் திகதியை ஒளிமயமான எதிர்காலத்தின் முதல் நாளாக்குவோம் என்றார்.

Related Posts