மக்களின் மறுமலர்ச்சிக்கு கூட்டுறவு உந்துகோலாக அமையவேண்டும் – முதலமைச்சர் சி.வி

எமது வடமாகாணத்தில் மீண்டும் மறுமலர்ச்சியை கூட்டுறவுச் சங்கங்களிடையே மட்டுமன்றி மக்கள் வாழ்விலும் ஏற்படுத்த நீங்கள் முன்வரவேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

o-op-meeting

வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு கிறீன் கிறாஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

போர்க் காலத்தில் எமது வடமாகாண பொருளாதார, வாழ்வாதார வசதிகள் பலவாறாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் காயப்பட்டவர்கள் ஆனார்கள். மனதாலும் உடலாலும் பாதிப்புக்குள்ளானார்கள். பொருட்களை இழந்தார்கள். குடும்பக் கட்டுக் கோப்பு பாரிய பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையை மாற்றி அமைப்பதும் மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் உங்கள் ஒவ்வொருவரின் தலையாய கடனாக இருக்க வேண்டும். கூட்டுறவானது மக்கள்வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஒரு உந்துகோலாக அமைய வேண்டும்.

வடமாகாணசபை வரமுன் உங்களுக்கிருந்த மனோநிலை மாற வேண்டும். இப்பொழுது நீங்கள் மக்களுடன் மிக நெருங்கி வந்து விட்டீர்கள். மக்களின் தேவைகள், அவர்களின் ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தையும் அருகில் இருந்து அவதானிக்க வேண்டியவர்களாகி உள்ளீர்கள் அவதானித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்ற கருத்தை நீங்கள் மக்கட் சேவையாற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய ஒரு முக்கியமான பதவியில் இருக்கின்றீர்கள்.

அதனைச் செவ்வனே செய்ய நீங்கள் முன்வரவேண்டும். அதே நேரத்தில் அரசாங்கத்திற்கும் அதாவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்குமிடையில் ஒரு பாலமாக நீங்கள் இருந்து கடமையாற்றுகின்றீர்கள் என்பதை மறக்கக்கூடாது.

பலவிதமான கூட்டுறவுச் சங்கங்கள் வடமாகாணத்தில் நிலைபெற்றிருக்கின்றன. சில நல்ல மாதிரியாக இயங்குகின்றன. மற்றைய சில உறங்கிக் கொண்டிருக்கின்றன. எமது வடமாகாணத்தில் மீண்டும் மறுமலர்ச்சியை கூட்டுறவுச் சங்கங்களிடையே மட்டுமன்றி மக்கள் வாழ்விலும் ஏற்படுத்த நீங்கள் முன்வரவேண்டும்.

எங்களைப் பொறுத்த வரையில் உங்கள் கடமைகளை நீங்கள் செவ்வனே செய்துகொண்டு போவதற்கு வழி அமைப்பதே எமது தலையாய கடனாகும். நாங்கள் யாவரும் சேர்ந்து மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தத் திடசங்கற்பம் கொள்வோமாக உங்கள் பிரச்சினைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்து அவற்றை ஆராயப்புகுவோம்.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு புனர்வாழ்வு முகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மீண்டும் பெறுவதற்கு பல தடவை முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

இந்தக் கட்டடத்தை மீண்டும் பெற்று கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம் – என்றார்.

இதேவேளை இந்த பயிற்சிக் கல்லூரி இராணுவத்தின் வசம் உள்ளதால் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறிகள் அடிப்படை வசதிகளற்ற இடங்களில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண உறுப்பினர் சயந்தன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி, அமைச்சின் செயலாளர் திருவாகரன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts