மூன்று வருடங்களாக மக்கள் பணியில் இருந்த நான், கடந்த நான்கு வாரங்களில் தேர்தல் பணிகளில் கண்டவை, கடந்தவை ஏராளம். உண்மையில் அதுவொரு கடினமான காலம். ஏன்னைச் சுற்றியிருப்பவர்களில், நண்பர்கள் யார்? நயவஞ்சகர்கள் யார்? ஏன இனங்கண்டு கொண்ட காலம்.
என் ஆதரவாளர்களினால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. எனது மக்கள் சந்திப்புக்கான அனுமதிகள் சில இடங்களில் மறுக்கப்பட்டன. எனது தம்பிமார் தாக்கப்பட்டார்கள். என்னை தடுக்க முனைந்தவர்கள் ஒருவர் இருவரல்ல, என் பயணத்தை இடைமறிக்க முயன்றவர்கள், உச்சக்கட்டமாக எனது பக்கபலமான என் தந்தையை முடக்கினார்கள். என் தேர்தல் பணிகளை தடுத்து விடலாம் என நினைத்தார்கள். ஆனால் என் மக்களின் ஆதரவுடனும், அன்பான அரவணைப்புடனும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிப்பாதையில் வீறு நடை போட என்னால் முடிந்தது. என்னை தடுத்த போது இருந்த வேகத்தை விட அதீத வேகத்துடன் நான் முன்னேறினேன். தர்மம் வெல்லும் என்பதற்கு மேலாக என் மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் அதிகம் மதித்திருந்தேன்.
எனதருமை தென்மராட்சி பிரதேச மக்களே, உங்களை சந்திக்கவும், உங்களின் குறை நிறைகளை கேட்டு தெரிந்து கொள்ளவும், நான் எடுத்த முயற்சிகளை தடுத்தவர்கள் யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். வேண்டாத பிரச்சனைகள் வேண்டாம் என்று விலகியிருந்தேன். என் நிலை புரிந்த மக்கள் நீங்கள் என்பதாலும், என் மீதான ஆதரவுக் கரத்தை வேறு திசையில் திருப்பாதவர்கள் நீங்கள் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் உங்கள் பிரதேச வாசியாக காட்டிக் கொள்ளாதவர்களினால் செய்ய முடியாதவற்றை உங்களுக்காக செய்தவன் என்ற என் மீதான நம்பிக்கையே ஆகும். என்னை உங்களிடம் வரத் தடுத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசும் விதமாக என் வெற்றியை சரியான பதிலடியாகக் கொடுத்து, உங்கள் மாகாண சபை பிரதிநிதியாக உங்களைச் சந்திக்க நான் வருவேன்.
நான் முன்னரே குறிப்பிட்டதைப் போன்றே என்னால் எனது யாழ்ப்பாண மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன். அதற்கான பாதை இப்போது மக்களாகிய உங்களால் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது உங்கள் சேவகனாக உங்களோடு இருக்கும் நான், எதிர்வரும் 22ம் திகதி காலையில் உங்களின் பிரதிநிதியாக உங்களோடு இருப்பேன் என உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன். மீண்டும் வெற்றி பெற்ற நாளில் சந்திக்கின்றேன். என்று சாவகச்சேரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் அங்கஜன்