மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – டக்ளஸ்

எமது மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமன்றி அரசியல் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதே எமது அரசியல் நிலைப்பாடாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (03) ஆறுதல் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எனது கோரிக்கையின் பிரகாரம் வடமாகாண ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் ஆளுநர் ஊடாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் அது தொடர்கின்றது.

அந்தவகையில், தற்போதைய வடமாகாண சபையூடாக முன்பள்ளி ஆசிரியர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனாலும், அவர்கள் குறித்த விடயத்தில் அக்கறையற்று இருக்கின்றார்கள்.

வட மாகாண சபைக்கென மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை கொண்டு மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாதவர்களாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி சி. ஹேமா, முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts