தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
‘சிரேஷ்ட அரசியல்வாதியான ரணில் விக்கிரசிங்க நான்காவது தடவையாகவும் பிரதமராக பதவி வகிப்பதுடன்இ 40 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றார்.
பிரதியமைச்சராக, அமைச்சராக, பிரதமராக இருந்து மக்களுக்கு பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரசிங்க, சேவையாற்றியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நியமிக்கும் முடிவை எடுத்து- நாட்டுக்காக விட்டுக்கொடுப்பை செய்திருந்தார்.
அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு 30 வருடகால ஆயுதப்போராட்டமும் ஒருகாரணியாக இருந்தது.
தேசிய இனப்பிரச்சினையும், தேசிய பொருளாதாரமும் ஒன்றுடொன்று தொடர்புபட்டது. ஆகவே, பயனுள்ள தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
இலங்கைக்கு உலகின் நல்லெண்ணமும் கிடைத்துள்ளது. அது அதிகரிக்கப்படவேண்டும். எனவே, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து குறிக்கோள்களை அடைவதற்காக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்துச்செயற்படவேண்ண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சார்பில் பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்றார்.