மக்களின் தேவைகளிற்கு மாத்திரமே காணிகள் : முதலமைச்சர்

பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

vicky-vickneswaran-cm

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இன்று உதவிபொருட்கள் வழங்கிவைத்து கருத்து தெரிவிக்கும் போது இராணுவத்தின் தேவை கருதி பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க முடியாது அதற்கு சட்டத்தில் இடமில்லை என சட்டவல்லுநர்களிற்கு அறிவுரை வழங்கியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டேன் எந்த அடிப்படியில் பொதுமக்களின் காணிகளை அரசுக்கு கையளிக்கின்றீர்கள் என்று அதற்கு அவர் சட்டத்தின் அடிப்படையில் என தெரிவித்தார்.

அதுதான் எந்த சட்டத்தின் கீழ் என கேட்ட போது கையேற்பு சட்டத்தின் கீழ் பொதுமக்களின் நன்மைகருதி எடுக்கவேண்டிய சட்டத்தின் அடிப்படையில் கையளிப்பதாக தெரிவித்தார்.

அதுதான் பொதுமக்களின் நன்மை என்பது யாருடைய நன்மைகருதி என கேட்டபோது இராணுவத்தின் நன்மை கருதி என தெரிவித்தார். அப்போது நான் கூறினேன் பொதுமக்களின் நன்மைக்கும் இராணுவத்தினரின் நன்மைக்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன.

இராணுவத்தினர் எங்கிருந்தோ வந்து இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக இருந்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் பொதுமக்கள் இங்கே நிரந்தரமாக இருப்பவர்கள் அவர்களது நன்மை கருதி ஒரு வைத்தியசாலை அல்லது பஸ் நிலையம் அமைப்பது போன்ற பொதுமக்களின் தேவைக்கு தன் காணி கையேற்பு சட்டத்தில் உரித்து உள்ளதே தவிர வெளியில் இருந்து வருபவர்களின் தேவைகளிற்கு காணிகளை கையேற்க முடியாது.

இருப்பினும் சட்டத்திற்கு முரணாக அவர்கள் செயற்படுகின்றனர். எனவே நாங்கள் அதனை தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடவேண்டியது அவசியம். நீதிமன்றம் மூலம் தடையுத்தரவை எடுத்து அளக்கவரும் போது தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியிருக்கின்றேன் – என தெரிவித்தார்.

Related Posts