மக்களின் காணியை விடுவிக்க 1200 மில்லியன் தேவை – அரசாங்கம் தரவில்லை என்கிறது இராணுவம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் பணம் தேவைப்படுகிறது என இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தப் பணத்தை அரசாங்கம் கொடுக்கவில்லை என பிரதமர் முன்னிலையில் இராணுவம் கூறியுள்ளது.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே இராணுவம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலாலி வீதியின் கிழக்குப் புறமாகவுள்ள மிக வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இதனை வலியுறுத்தியதுடன், வல்லை அராலி வீதி மற்றும் மயிலிட்டியில் 3 கிராம சேவகர் பிரிவுகள் தொடா்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் இராணுவத்தின் இந்த நடவடிக்கை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய தடையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி, மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கத்திடம் கோரியிருந்ததாகத் தெரிவித்ததுடன், அந்த நிதியை அரசாங்கம் தராத நிலையில் காணி விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts