மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! – மாவை எச்சரிக்கை

“மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார்” என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா நேற்றுச் சபையில் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் காணி மீட்டுப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என எச்சரித்த அவர், காணி விடுவிப்பு விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக மக்களின் வாக்குகளினால்தான் இந்தச் சபையில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இதனை மறந்துவிடக்கூடாது. அமைச்சர் சுவாமிநாதனிடம்தான் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அமைச்சு ஒப்படைக்கப்படவேண்டும் என நாம் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தோம். அத்துடன், அமைச்சர் சுவாமிநாதனுடன் 100இற்கு 200வீதம் ஒத்துழைத்து செயற்படவும் நாம் தயாராக இருந்தோம். ஆனால், சுவாமிநாதனோ இன்று எம்மை அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி, தன்னிச்சையாகச் செயற்படுவதுடன், வடக்கு, கிழக்கு விடயங்களில் தனித்துப் பயணிக்கவும் முற்படுகின்றார்.

வடக்கைப் பொறுத்தவரை பனைவளம் மிக முக்கியமானதாக உள்ளது. பனைவளத்துடன் தொடர்புடைய பல தொழில்முயற்சிகளும், பெருமளவு மக்களும் இங்கு உள்ளனர். எனவே, வடக்கிலுள்ள பனை அபிவிருத்தி அதிகாரசபையை சிறப்பாகச் செயற்பட வைப்பதற்காக அதன் தலைவராக அந்தச் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பனைவளம் தொடர்பில் ஆழமான அறிவுகொண்ட பேராசிரியர் மோகனதாஸை நியமிக்குமாறு சிபார்சு செய்திருந்தோம்.

ஆனால், அதனைப் புறக் கணித்த அமைச்சர் தன்னிச்சையாக, பனைவளங்களுடன் தொடர்புபடாத அது தொடர்பான அறிக்கை கொண்டிராத ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபைத் தலைவராக நியமித்துள்ளார்.

இது குறித்து நாம் கவலையடைகின்றோம். இதுபற்றி மக்கள் எம்மிடம் கேள்வி கேட்கின்றனர். எனவே, நாம் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் ஒவ்வொரு அபிவிருத்தியிலும், எந்தவொரு நடவடிக்கைகளிலும் எம்முடன் பேசப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை, தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவமயப்படுத்தி அதன்மூலம் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி பௌத்தமயமாக்கி, தமிழர்களுக்குப் பூர்வீக இடங்கள் இல்லையெனக் காட்டி தமிழர் அரசியல் எதிர்காலத்தை அழிப்பதே மஹிந்த சிந்தனையின் இலக்கு.

இந்நிலையில், தமது சொந்த இடத்தில் வாழும் உரிமை வேண்டும் என்பதற்காகவே ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கான உறுதிமொழிகளை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கியிருந்தனர். ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.

யாழ். குடாநாட்டில் 11 அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் 2 இலட்சம் பேர் இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள 155 அகதிகள் முகாம்களில் ஒரு இலட்சத்து 68 ஆயிரம் பேர் அகதிகளாகவுள்ளனர். இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் சொந்த வீடுகளிலே வாழவே விரும்புகின்றனர். ஆனால், இந்த மக்களின் காணிகள், வீடுகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், மக்களின் அகதிவாழ்க்கை அப்படியே தொடர்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றோம். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் எமக்குக் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இல்லையேல், மஹிந்த அரசுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டங்களைப்போல மீண்டும் காணி மீட்புப் போராட்டத்தில் இறங்குவோம்.

இதேவேளை, இராணுவத்தினரிடம் காணிகளைப் பறித்துக்கொடுத்த பலர் யுத்த சூழ்நிலைகளால் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர். இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி, எமது தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தச் சபையில் வலியுறுத்துகின்றேன்” என்றார்.

Related Posts