வடக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. எஞ்சிய 8 ஆசனங்களில் ஏழு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஒரு ஆசனத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கைப்பற்றியிருந்தன.
வடமாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நேற்று ஐனாதிபதி முன்பாகப் பதவியேற்றுள்ளனர்.
கந்தசாமி கமலேந்திரன், ஏ.ராமநாதன், டி. செனவிரட்ன, ஏ. ஜயதிலக்க, அப்துல் ரிஸ்கான், பி.தவநாதன், ஏ.ஜவாஹில் மற்றும் எம்.ரியாஸ் ஆகியோரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
பதவியேற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், தாம் மக்களின் ஆணையினை மதித்து ஏற்று நடக்கவுள்ளதாகவும் தமது மக்கள் சேவை என்றும் தொடரும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் பொறுப்புக்களை உணர்ந்தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடக்கு மாகாண சபையை செயலூக்கமுள்ளதோர் சபையாக நடத்திச் செல்ல எமது அனுபவப் பகிர்வுகளையும் தேவையான பொழுதில் ஆளுங்கட்சிக்கு நாம் வழங்குவோம்.
கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபை ஒன்று இல்லாத சூழலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் மத்திய அரசுடன் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு எமது மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வந்துள்ளோம். அன்று எமது கட்சி கூறிய யதார்த்தத்தை இன்று முதலமைச்சர் கூறுவதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.
இதையே நாம் இணக்க அரசியல் என்று கூறினோம். இதனூடாகவே எமது மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்த முடியும். அழிந்துபோன எமது வாழ்விடங்களையும் புதுப் பொலிவுடன் மீளக்கட்டி எழுப்ப முடியும். இந்த யதார்த்தையே நாம் கூட்டமைப்பினருக்கும் கூறி வந்துள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியிலும் இதே வழிமுறையே வெற்றியளிக்கும். இதை தற்போது உணர்ந்திருக்கும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.
எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகை தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசுடன் புரிந்துணர்வுடனான செயற்பாடு ஒன்று அவசியம். முதலமைச்சரும் கூட்டமைப்பின் தலைமையும் அதை உணர்ந்திருப்பதுபோல் கூறியிருக்கின்றனர். மன உறுதியோடு இவ்வழி முறையில் அவர்கள் பயணிக்கும்போது நாமும் அதை முழு மனதுடன் வரவேற்று எமது ஆதரவினை வெளிப்படுத்துவோம்.
இந்த வேளையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதனூடாகவே வெற்றிகரமான பயணத்தை செய்யமுடியும். நடைமுறைச்சாத்தியமான முயற்சிகளுக்கும், மக்களுக்கான சேவைக்கு முன்னுரிமையளிக்கும் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்று பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றதன் பின்னர் கருத்துரைக்கையில் தெரிவித்தார்.
நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜெயந்த, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டனர்.