Ad Widget

மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப பயணிப்பது வட மாகாணசபையின் கடமை – ஆளுநர்

மாகாண சபையின் முறைமைகளுக்கு அமைவாக, வடக்கு மாகாண சபை மக்களின் அபிலாசைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் எதிர்கால இலக்குகளை நோக்கி செல்வது இம்மாகாண சபையின் முக்கிய கடமையாகும் என வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

alunar-chanthera-sri--1

வடக்கு மாகாண சபையின் முதலாவது பேரவையின் இரண்டாவது கூட்ட தொடர் அமர்வு இன்று காலை 9 மணியளவில் கைதடியில் உள்ள வட மாகண சபை கட்டடத்தில் நடைபெற்றது.

இவ் அமர்வுக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநருக்கும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கும் முன்னதாக பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

alunar-chanthera-sri

அதன் பின்னர் வடக்கு மாகாண சபையின் இரண்டாவது கூட்ட தொடருக்கான அமர்வு இடம்பெற்றது. அதில் ஆளுநர் தனது முதன்மை உரையை ஆற்றினார். அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார் .

அங்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மேலும் உரையாற்றுகையில்,

வட மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் பொறுப்புக்களை சகல மக்களின் நன்மைகளுக்காக முழுமையாக செயற்படுத்துவார்கள்.

வடமாகாண அபிவிருத்தியில் ஈடுபாட்டுடன் தங்களின் பங்களிப்பை செய்வார்கள். மத்திய அரசுடன் இணைந்து நன்னோக்குடன் செயலாற்றுவதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியுமென்பது எனது திடமான நம்பிக்கை ஆகும்.

இந்த வகையில் வடமாகாண மக்களின் நன்னோக்கதிற்காகவும் எதிர்கால சுபீட்சத்திற்காகவும் விடாமுயற்சியுடன் நேர்மையானதும் பொறுப்பு வாய்ந்ததுமான அபிவிருத்தி கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது முக்கியமானதாகும்.

மாகாண சபைக்கான தந்திரோபாயத் திட்டமிடலை உருவாக்கி மாகண நோக்கங்களை அடைவதனூடாக தேசிய இலக்குகளை அடைந்து இலங்கையின் இறமைக்கும் ஒற்றுமைக்கும் உந்து சக்தியாக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.

எதிர்காலத்தில் விரைவாக ஆசியாவின் ஆச்சரியம் எனும் இலக்கினை எம் தாய் நாடு அடைவதற்கு மாகாண அடைவுகள் வழிவகுக்கும்.

அந்த வகையில் அந்த தந்திரோபாயத் திட்டமிடல் மூலம் துரித வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் மக்கள் அனுபவிக்கும் வண்ணம் மாகாண சபையானது செயற்பட வேண்டும் என்பது எனது பேரவாவாகும் என தெரிவித்தார்.

அதேவேளை ஆளுநர் முதன்மை உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் சு.சுகிர்தன், அனந்தி சசிதரன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Related Posts