மக்களின் அன்றாட வாழ்வில் தலையிடும் உரிமை படையினருக்கு இல்லை! – மாவை சேனாதிராசா

பொதுமக்களின் வாழ்வியல் விடயங்களில் இராணுவத்தினரும், கடற்படையினரும் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி துறைமுகத்தை இடமாற்றுவது தொடர்பில் இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் கையெழுத்துக்கள் பெற முயற்சிக்கப்படுகின்றமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாவிட்டாலும் ஒரு நல்லாட்சிக்காகவும் தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசிற்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

தமிழ் மக்களின் நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில் சில முன்னேற்ற கரமான நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக வலிகாமம் வடக்கு, கிழக்கிலும் மற்றும் சம்பூர் பிரதேசத்திலும் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வலிகாமம் வடக்கில் மயிலிட்டி துறைமுகப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படலாம். அப்பகுதியில் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்துவது தொடர்பில் அரசுடன் பேச்சுவார்த்தை எம்மால் நடத்தப்பட்டது.

மேலும் அபகரிக்கப்பட்ட காணிகள் சொந்த மக்களிடம் ஒப்படைக்கப்படவும் சொந்த இடத்தில் அப்பகுதி மக்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு ஏற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள், இணக்கங்கள் இருக்கின்ற நிலையில் கடற்படையினர் மயிலிட்டியில் வாழும் கடற்றொழிலாளர்களை சந்தித்து உங்களுக்கான துறைமுகத்தை பருத்தித்துறையில் அமைத்து வருவதாகக் கூறுகின்றனர்.

அத்துடன் அதற்காக தொழிலாளர்களிடம் இருந்து கையெழுத்து பெறுவதற்கான முயற்சிகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடு மீனவர்கள் மத்தியிலும் மயிலிட்டி வாழ் மக்களிடமும் சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலிட்டித் துறைமுகத்தை தங்களிடம் கையளிப்பதற்கு மாற்றுத்திட்டமாக இந்த முயற்சி கடற்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினை தொடர்பில் நாம் விசேட அக்கறை கொண்டுள்ளோம். குறிப்பாக துறைமுகம் அமைத்தல், காணி விடுவிப்பு தொடர்பில் கடற்படையினரோ இராணுவத்தினரோ மக்களிடம் சென்று நட வடிக்கை எடுக்கத் தேவையில்லை. எவருக்கும் அந்த உரித்தும் கிடையாது.

இத்தகைய பிரச்சினை தொடர்பில் தீர்வுகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகம், அரச அதிகாரிகள் காணப்படும்போது நேரடியாக கடற்படையினர், இராணுவத்தினர் இதில் தலையிட்டு கையொப்பங்கள் வேண்டப்படுவதை பகிரங்கமாக நாம் கண்டிக்கின்றோம்.

இத்தகைய செயற்பாட்டை நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்துள்ளோம் என்றார்.

Related Posts