மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் தெரிவுசெய்யப்பட்ட உரிய பயனாளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்,

10.11.2016 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டமை தொடர்பாக 18.11.2016 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக ‘வாழ்வாதாரம் வழங்கலில் தவறான பயனாளிகளைத் தெரிவு செய்தமை’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற கவனயீர்ப்பு தொடர்பாக பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

மேற்படி வாழ்வாதார உதவிகள் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த கடந்தகால யுத்தத்தினால் கணவனை இழந்த, கணவன் காணாமல்போன, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது.

மேற்படி பயனாளிகள் தெரிவென்பது, சரியான முறையில் தகுதியான பயனாளிகளை இனங்காணவும், அவர்களினை சரியான முறையில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள ஏதுவாகவும், உதவி வழங்கும் போது, இரட்டைத்தன்மை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும் அரச திணைக்களங்களில் பதிவு செய்யப்பட்டதும் அரச உத்தியோகத்தர்களது தொடர் கண்காணிப்பில் உள்ளதுமான மாதர் சங்கங்கள் ஊடாக முறையான முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டது.

இதற்கான நிதிமூலம் முதலமைச்சரின் அமைச்சின் மகளிர் பிரிவுக்காக ‘மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை’ ஊடாக ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். கவனயீர்ப்பில் குறிப்பிட்டது போல லண்டன் சிவன் கோவில் நிர்வாகத்தினரிடமிருந்து பெறப்பட்டது என்பது முற்றிலும் தவறானது. தவறான தகவல்களைப்பெற்று பாதிக்கப்பட்ட மக்களை தவறான வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்து மக்கள் குழுக்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் ஒரு செயற்பாடாகவே மேற்படி செயற்பாட்டைக்கருத வேண்டியுள்ளது.

மேலும், தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்ட பயனாளிகள் எமது அமைச்சு சார் உத்தியோகத்தர்களூடாகவும் சங்க உறுப்பினர்களூடாகவும் தொடர்கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts