வலி.வடக்கைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தி குறித்த இரு பகுதி மக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த இராணுவத்தினர் முற்படுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார் வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொதுநலவாய மாநாடு நடைபெறும் இந்த வேளையில் இராணுவத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களில் வசித்து வரும் மக்களை இராணுவத்தினர் நேற்றைய தினம் பலாலி கிழக்குப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் அந்தப் பகுதிகளில் ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தற்போது பருத்தித்துறை இன்பருட்டி, எரிஞ்சகரைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது உறுதிக் காணிகளில் மயிலிட்டி மற்றும் தையிட்டி மக்களை குடியேற்றுவதன் மூலம் இரு தரப்பு தமிழ் மக்களிடையேயும் மோதலை ஏற்படுத்த இராணுவத்தினர் முயற்சிக்கின்றனர்.
மேலும் மீள்குடியமர்வு நடவடிக்கை என்பது சிவில் நடவடிக்கை. அந்தந்த மாவட்ட அரச அதிபராலேயே மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் இங்கு இராணுவத்தினரே சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர்.
பிரதேச செயலருக்கோ, அரச அதிபருக்கோ தெரியமல் அவர்களது பங்களிப்பு இல்லாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினராலேயே இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இராணுவ ஆட்சி இங்கு நடைபெறுவதையே இது எடுத்துக்காட்டுகின்றது – என்றார்.