மகேஸ்வரன்,ரவிராஜ் போன்று குரல்கொடுப்பேன்: துவாரகேஸ்வரன்

thuvarakeswaran-thuvaமுன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கென தனியானதொரு கலை, கலாசாரப் பாரம்பரியம் இருக்கிறது. அதனை மதித்துப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

எனவே அந்த அரும்பணியை செய்வதற்கு நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

எனது சகோதரர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களுக்காக அச்சமின்றி குரல் கொடுத்தவர். அதேபோன்றுதான் அமரர் ரவிராஜும் செயற்பட்டு வந்தார். நானும் அவர்களைபோன்றே மக்களுக்கு சேவையாற்றுவதையே விரும்புகின்றேன்.

இன்று பல அரசியல்வாதிகள் உணர்ச்சிவசமாக பேசி மக்களை ஏமாற்றி அதிலே குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களின் மாயவலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியத்துக்கோ எதிரானவன் அல்ல. ஆனால் தமிழ் தேசியம் என்றெல்லாம் உணர்ச்சி வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துபவர்களுக்கே நான் எதிரானவன். நீங்கள் எந்தக் கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களித்தாலும் சரி, அந்தக் கட்சியில் உள்ள நல்லவர்களுக்கு, மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு குறிப்பாக துடிப்பான இளம் முகம்களுக்கு வாக்களியுங்கள்.

சக்கரநாற்காலியில் செல்லும் தள்ளாத வயதில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதைவிட அவ்வாறானவர்களை அரவணைத்துக் கொண்டு எமது எதிர்கால சமுதாயத்தைக் கட்டிக்காக்கக் கூடிய வீரியமும் விவேகமும் உள்ளவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றியடையச் செய்யுங்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள தேசியக் கட்சிகளிலும் எமது மக்களின் பிரச்சினைகளைப் பேசக் கூடியவர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஆமா சாமி போட்டுக் கொண்டு அக்கட்சிகளின் அடிவருடிகளாக இருக்கக் கூடாது. நான் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டாலும் எமது மக்களின் குறிப்பாக சமூகத்தின் பதுகாவலனாகவே செயற்படுவேன். அதற்குப் பங்கம் விளைவிக்கின்ற பட்சத்தில் அதற்கெதிராக துணிந்து குரல் கொடுப்பேன். இல்லையேல் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts