மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
”வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இலங்கை வரலாற்றில் ஒரு துன்பியல் நிகழ்வாகும். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 48 மணித்தியாலங்களில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அந்த மக்கள் 500 ரூபா பணத்துடன் தமது சொத்துக்களை இழந்து அகதிகளாகினர். வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டறக் கலந்து வாழ்ந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளினால் 1990ம் ஆண்டில் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதனால் இரண்டு சமூகத்தின் மத்தியிலும் பாரிய பிளவு ஏற்பட்டது.
அதேபோல் கடந்த மஹிந்த ஆட்சியில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் கொடூரமான முறையில் சிறுபான்மை இன மக்கள் அடக்கப்பட்டு வந்தனர். அதேபோல் திட்டமிட்ட ஓர் இன அழிப்பும் கடந்த ஆட்சியில் நடைபெற்றது. பெரும்பான்மை ஆதிக்கத்தைத் தூண்டிவிடும் வகையிலும் அவர்களது கரங்களை உயர்த்தும் வகையிலுமான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன. அதில் இருந்து மக்களையும் நாட்டையும் மீட்டெடுத்துள்ளோம். நாட்டை ஜனநாயகத்தின் பாதையில் செல்ல வழியமைத்துள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளன. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படவேண்டும். தமிழ், முஸ்லிம் சமூகத்தைப் பலப்படுத்தி நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப எமது தேசிய அரசு முன்னிற்கும்.
எனவே, பழைய விடயங்களை மறந்து – கசப்பான சம்பவங்களைக் கடந்து ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையவேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க பல வழிமுறைகள் உள்ளன. தீர்வும் மிக அருகாமையில்தான் உள்ளது. அவற்றை வெற்றிகொள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணையவேண்டும். பல்லின சமூகம் அமைதியாக வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி புதிய இலங்கையை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.