மகிந்தவுக்கு மைத்திரி எழுதிய கடிதம்

இரண்டு தசாப்த காலமாக நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற உங்களது தலைமையிலான அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்த கடிதத்தை அனுப்பி வைக்கின்றேன்.

உங்களைப் போன்றே நானும் தேசிய அரசியலுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே பிவேசித்தேன். நீங்கள் இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் மீது நம்பிக்கை கொண்ட கட்சி ஆதரவாளர்களுக்குமே நன்றி பாராட்ட வேண்டும். எனினும் நான் இன்று ஜனாதிபதியாகியிருப்பது வேறும் வழியிலாகும்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டே நான் ஜனாதிபதியாக தெரிவாகினேன். உங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் மக்கள் காட்டி வந்த எதிர்ப்பிற்கு தலைமை தாங்கி, உங்களிடமிருந்தும் கட்சியிடமிருந்தும் விலகிப் போயிருந்த ஜனாதிபதிப் பதவியை கட்சிக் உரித்தாக்கியிருக்கின்றேன்.

எதிர்க்கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுடன் பொது வேட்பாளராக தெரிவாவதற்கான, இரகசியம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எனக்கும் இடையில் நிலவிய போலியற்ற இதயபூர்வமான பிணைப்பேயாகும்.

தேர்தல் தோல்வி ஓர் கசப்பான அனுபவமாகும். எனினும் ஜனவரி மாதம் 8ம் திகதி தேர்தல் தோல்வியின் பின்னர் 1978 மற்றும் 2001ம் ஆண்டு தேர்தல் தோல்விகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்நோக்கிய நெருக்கடிகள் இம்முறை எதிர்நோக்க நேரிடவில்லை.

ஏனெனில், நீங்கள் தோல்வியைத் தழுவியதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவானது 48 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் உறுப்பினராகவும், 13 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றிய ஒருவரேயாகும்.

அனைத்து விதமான தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும் நான் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தேன். ஏதேனும் காரணத்திற்காக மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்ந்த வேறும் ஓர் நபர் பெர்து வேட்பாளராக போட்டியிட்டு நீங்கள் தோல்வியைத் தழுவியிருந்தால், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதனை நீங்கள் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் நான் பாதுகாத்தேன்.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் உடனடியாக நான் பாராளுமன்றைக் கலைத்திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது அனுமதிக்க முடியாது.

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவாகும் வரையிலான உங்களது பயணத்தில் நீங்கள் எதிர்நோக்கிய நெருக்கடியான தருணங்களில் நான் உங்களுக்காக குரல் கொடுத்தமை எந்த வகையிலும் நீங்கள் மறந்திருக்க முடியுமா?

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் உங்களை பிரதமராக நான் செய்த அர்ப்பணிப்புக்கள் போராட்டங்களை நீங்கள் மறந்திருக்க முடியாது. நீங்கள் பிரதமராகக் கூடாது என்பதற்காக அப்போது ஜே.வி.பியில் அங்கம் வகித்த விமல் வீரவன்ச கட்சியின் முழுப் பலத்தைப் பிரயோகித்து செய்த நாசவேலைகளின் போது நான் உங்களுடன் இருந்திருக்கின்றேன்.

கட்சியின் செயலாளரான நான் உங்களை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென தைரியமாகவும் திடமாகவும் குரல் கொடுத்திருந்தேன். அப்போது இன்று உங்களுக்காக குரல் கொடுக்கும் பலர் ரணிலுடன் புதிய அரசாங்கத்தில் எவ்வாறான அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது என பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

நீண்ட காலமாக அரசியல் நண்பர்களாக இருந்த எமக்கு இடையில் விரிசல் ஏற்படுவதற்கு பசில் ராஜபக்சவின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளே முக்கிய ஏதுவாகியது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றேயாகும். அவர் மைத்திரிபால எதிர் கொள்கைகளைப் பின்பற்றி என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்ட கடும் பிரயத்தனம் மேற்கொண்டார். இந்த முயற்சி உங்கள் அனைவரையும் மோசமாக எதிர்த்திசையில் தாக்கியுள்ளது.

பசில் ராஜபக்ச எனது அரசியல் பயணத்திற்கு தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி வந்தார். இந்தப் பிரச்சினைகளில் தலையீடு செய்து என்னை காப்பாற்றுவீர்கள் என எதிர்பார்த்தேன் எனினும் நான் பொது வேட்பாளராக போட்டியிடும் வரையில் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.

கடந்த ஏழு மாத காலப்பகுதியில் நீங்களும் நானும் சந்தித்த மூன்று சந்தர்ப்பங்களிலும், நீங்கள் குருணாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கையொப்பமிடுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொலைபேசியில் உரையாடிய போதும் நீங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றே கூறியிருந்தேன.; ஏனெனில் இந்த பொதுத் தேர்தலை வழிநடத்தி கட்சியை வெற்றியீட்டச் செய்யும் முனைப்புக்களை மேற்கொள்ள திட்ட்டமிட்ருந்தமையே அதற்கான காரணமாகும். எனினும் தேர்தலில் போட்டியிடுவதாக நீங்கள் வேட்பு மனுவில் கையொப்பமிட்டதனைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி என்ற ரீதியில் எனது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்பட்டன.

நீங்கள் போட்டியிடாமல் இருந்திருந்தால் எனக்கு தேர்தலில் ஆதரவளித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், மத்திய தர வர்க்க மக்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் ஆதரவினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மீளவும் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.

நீங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறியதன் அர்த்தம், நீங்கள் ஒட்டு மொத்தமாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்திலானதல்ல. உங்களுக்கு கௌரவமான அரசியல் பதவியொன்றை வழங்க வேண்டுமென நான் யோசனை முன்வைத்திருந்தேன், அதற்காக அரசியல் சாசன திருத்தங்கைளக் கூட நான் பரிந்துரை செய்திருந்தேன். உங்களது குடும்பத்தில் பலர் இதற்கு இணங்கியிருந்தனர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீங்கள் இந்த அனைத்தையும் நிராகரித்தீர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்து எந்தவிதமான கரிசனையும் அவசியமும் இல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிறிய கட்சிகளின் கைதியாக நீங்கள் மாற்றமடைந்துள்ளீர்கள்.

அந்த தரப்புக்கள் உங்களுக்கு காணப்படுவதாக கருதப்படும் வாக்குப் பலத்தினைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றியீட்ட முயற்சித்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரான 64 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இராட்சத சுதந்திரக் கட்சி சிறு கட்சிகளின் பிடியில் அகப்பட்டு சிக்கியதற்கான பொறுப்பினை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமது கட்சியின் சிரேஸ்ட அரசியல்வாதிகள் பலர் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் விருப்பு வாக்கு வேட்டையில் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலைமை வருத்தமளிக்கின்றது.

வாக்காளர் அடிப்படையற்ற சில சிறிய கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணத்தை தடை செய்ய எடுக்கும் முயற்சிகளை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951ம் ஆண்டு கட்சியின் முதலாவது அதிகாரிகளை தெரிவு செய்த போது எமது நாட்டின் அனைத்து இன மத சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய வகையிலான பேர்னாட் அலுவிஹாரே, பதியூதின் மொஹமட் மற்றும் தங்கராஜா போன்ற சமூக நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு கட்சியின் முக்கிய பதவிகளை வழங்கியிருந்தார். தூரதரிசனத்துடன் இந்த தீர்மானங்களை எடுத்திருந்தார்.

எனினும், 1956ம் ஆண்டில் சுதந்திரக் கட்சி இனவாத சார்புடைக் கட்சியாக கருத்துக்கள் எழத் தொடங்கியிருந்தது. எனினும் அதன் பின்னர் கட்சியை நிர்வாகம் செய்த சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் இன மத பல்லினத்தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் ஆட்சி செய்தனர். எனினும் நீங்கள் ஆட்சி செய்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சியின் பல்லின சார் யதார்த்ததை புரிந்து கொள்ளா கட்சியாக மாற்றமடைந்திருந்தது. அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்கள பௌத்த சமூகத்தை பிரதிபலிக்கும் கட்சியாக மாற்றமடைந்துள்ளது. இவ்வாறான ஓர் கடும்போக்குவாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றதொரு கட்சிக்கு ஏற்புடையதாக அமையாது.

ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தையும் உள்ளடக்கிய கட்சியாக மீளவும் சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்பும் சவாலுக்கு நான் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. எனினும் உங்களைச் சுற்றியிருப்போர் இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக விருப்பு வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இந்த இனவாதிகள் அனைவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு தேவையான வகையில் கட்சியை வழிநடத்த இடமளிக்க முடியாது.

நீங்கள் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் நாட்டில் பெரும்பான்மை இனம் என்று ஒன்றும் சிறுபான்மை இனங்கள் என ஒன்றும் கிடையாது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தீர்கள். எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம் முதல் இந்த மாதம் 12ம் திகதி தேசிய பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வி வரையிலான அநேக சந்தர்ப்பங்களில் நீங்களும் உங்களுக்காக குரல் கொடுக்கும் தரப்பினரும் கடுமையான இனவாதத்தை பிரதிபலிக்கின்றீர்கள்.  என்னுடைய பௌத்த மதத்தின் அடிப்படையிலும் ஏனைய மதங்களின் அடிப்படையிலும் இதனை அனுமதிக்க முடியாது.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எம்மீது எல்லையற்ற நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வரும் இந்த தருணத்தில், நான் தேர்தலை வழிநடத்தியிருந்தால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவினையும் நம்பிக்கையயும் எமது கட்சிக்கு நிச்சயமாக பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்பதனை நான் வலியுறுத்துகின்றேன்.

21ம் நூற்றாண்டில் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணத்தில் இனவாத தீயை மூட்டி குறுகிய அரசியல் லாபத்தை ஈட்ட முயற்சிக்கும் நடவடிக்கையானது நாட்டுக்கும் கட்சிக்கும் செய்யும் பாரிய அழிவாகும்.

வேட்பு மனு வழங்குவது குறித்து எழுந்த பிரச்சினைகளின் போது கட்சி பிளவடையாமல் தடுப்பதனையே நான் மிகவும் முக்கியமானதாக கருதினேன். இரண்டு கட்சி முறைமை கொண்ட எமது நாட்டைப் போன்ற நாடுகளில் ஒரு கட்சி பிளவடைவதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை என்னைப் போன்றே உங்களுக்கு நன்றாகத் தெரியும் என நம்புகின்றேன்.

நீங்கள் தனியான குழுவாக போட்டியிடத் தீர்மானம் எடுத்தனைத் தொடர்ந்து நான் வேண்டுமேன்றே பின்வாங்கினேன். ரணதுங்க குடும்பத்தில் மூன்று பேருக்கு கம்பாஹவில் வேட்பு மனு வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என நான் கருதினேன். பிரசன்ன ரணதுங்க வேட்பு மனு தேவையில்லை என கூறுவார் என எதிர்பார்த்தேன். பிரசன்னவிற்கு வேட்பு மனு வழங்காவிட்டால் தனித்து போட்டியிடுவதாக நீங்கள் தீர்மானித்திருந்தீர்கள். 64 அண்டு பழமையான கட்சியொன்று ஒரு நபருக்கு வேட்பு மனு வழங்காத காரணத்தினால் பிளவடைவதனை நான் விரும்பவில்லை.

தேசிய அரசாங்கம் பற்றிய யோசனை என்னுடைய தனியான யோசனை கிடையாது. இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் பூரண அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி இணக்கம் ஏற்படுத்திக் கொண்டு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை உங்களது தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

உங்களிடம் காணப்படும் வாக்கு பெறுமதி என்னும் இறுதிச் சொட்டு இரத்தத்தை உரிஞ்சிக் குடிக்கும் கொடூர நோக்குடைய தரப்பினர் உங்களைச் சுற்றியிருக்கின்றார்கள். அவர்கள் இரகசியமாக என்னைத் தொடர்பு கொண்டு பொதுத் தேர்தலின் பின்னர் என்னுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும், ஏதேனும் அமைச்சுப் பதவியை வழங்குமாறும் கோரி வருகின்றனர். தொலைபேசி ஊடாகவும் தூதுவர்கள் ஊடாகவும் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எமது கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரோதிகளாக சித்தரித்த தரப்பினர் இறுதி நேரத்தில் எனது புகைப்படம் அடங்கிய விளம்பரங்களை பிரச்சாரம் செய்து வருவதனை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.  விருப்பு வாக்கு மாபியாவினால் சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய தோல்வியைத் தழுவக் கூடும்.

நீங்கள் என்னுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தீர்கள் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வாறு உண்மையாகவே என்னுடன் இணைந்து செயற்பட விரும்பினால், விசேடமான விடயமொன்றை நான் உங்களுக்கு கூற வேண்டியுள்ளது.

18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினதும் மக்களினதும் ஒட்டுமொத்த ஜனநாயகமும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்காகவே நீங்கள் அவ்வாறு சட்டம் இயற்றியிருந்தீர்கள்.

ஏனைய ஜனாதிபதிகளைப் போன்று இரண்டு தடவையின் பின்னர் நீங்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தால் கட்சிக்காக அர்ப்பணிப்புச் செய்த சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றுமொருவர் பிரதமராகவும் பதவி வகிக்க சந்தர்ப்பம் கிட்டியிருக்கும்.
இதன் மூலம் தேர்தலின் பின்னரும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பங்களை முடக்குவதே உங்களது திட்டம் என்பது வெளிச்சமாகியுள்ளது.

அவர்களுக்கு இப்போதேனும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் அல்லவா? அரசங்கமொன்றை அமைக்க தேவையான குறைந்தபட்ச 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டாலும் பிரதமர் பதவியை சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்க வேண்டியது சரியானது என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் 113 ஆசனங்களைக் கூட்டமைப்பினால் பெற்றுக்கொள்ள முடியாது போனால் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கு தலையீடு செய்ய முடியும். அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலும் நீங்கள் பிரதமராக பதவி விக்க கூடாது, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே பதவி வகிக்க வேண்டும். எமது கட்சியில் பிரதமர் பதவியை வகி;க்க கூடிய தகுதியும், திறமையும் அனுபவமும் உடைய பல சிரேஸ்ட தலைவர்கள் இருக்கின்றார்கள் என்பது ஓர் விசேட அம்சமாகும்.

நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, சமால் ராஜபக்ஸ, அதாவுட செனவிரட்ன, ஏ.எச்.எம்.பௌசீ, சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்சன யாபா போன்றவர்களை குறிப்பிட முடியும்.

இவ்வாறு ஒருவரை நியமிக்க உங்களது நெகி;;ழ்வுத்தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

ஜனாதிபதி தேர்தல் நிறைவின் பின்னர் விஹாரைகள் தோறும் வழிபாடுகளில் ஈடுபட்டமையும் அதற்கு ஊடகங்களில் வழங்கப்பட்ட பிரச்சாரமும் நகைப்பிற்குரியது.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி முதல் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி வரையில் உங்களது எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளை நான் நன்கு அறிவேன். கடந்த ஆறு மாத காலத்தில் விஹாரைகளுக்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் உங்களிடம் ஆன்மீக உணர்வு ஏற்பட்டிருக்கும் என்பது சந்தேகமேயாகும். நீங்கள் தனிப்பட்ட ரீதியில் கட்சி உறுப்பினர்களுடன் பேசும் போதும் குரோத உணர்வுடன் பேசுகின்றீர்கள்.

இவ்வாறான ஓர் நிலையில், கட்சியினதும் நாட்டினதும் நலனைக் கருத்திற் கொண்டு உணர்வுகளுக்கு அடிமையாகாது சிந்தனை ஆற்றலுடன் செயற்படுமாறும், இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும், கட்சிக்குள் பிளவினை எற்படுத்த வேண்டாம் எனவும் உங்களிடம் கோருகின்றேன்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படும். அவ்வாறு நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
மைத்திரிபால சிறிசேன
தலைவர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Related Posts