மகிந்தவுக்கு எதிராக கரு ஜயசூரியவை எதிரணிகள் ஆதரிக்கலாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி கூறுகின்றார்.

Asathsali

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்ற நீதிக்கான தேசிய அமைப்புக்கு தலைமை தாங்கும் மாதுளுவாவே சோபித தேரரின் முன்னெடுப்பில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சந்திப்பு தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அசாத் சாலி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இயங்கவுள்ள அரசியல்கட்சிகளின் கூட்டு ஊடக சந்திப்பு திங்களன்று நடக்கும் என்றும் அசாத் சாலி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் சோபித தேரர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அசாத் சாலி கூறினார்.

ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் வேறொரு தலைவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கும் நிலை உள்ளதாகவும் அசாத் சாலி தமிழோசையிடம் கூறினார்.

ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் சோபித தேரருடன் போது வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும் சாலி தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அந்த இறுதி அறிவிப்பை அக்கட்சியே அறிவிக்கும் என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கூறினார்.

எனினும், கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக அறிவிப்பதற்கான பரிந்துரையை தாம் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருவதாகவும் அசாத் சாலி மேலும் கூறினார்.

Related Posts