மகாசேனுக்காக மன்னிப்புக் கோரிய இலங்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு மகாசேன் என்று சூட்டிய பெயரை சிறிலங்கா விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு மகாசேன் என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது.

இது மியான்மர் – பங்களாதேஸ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் சிறிலங்காவிலும் காணப்படுகிறது. அங்காங்கே சிறியளவிலான சூறாவளி வீசி வருவதுடன், இடிமின்னலுடன் மழையும் கொட்டி வருகிறது,

இந்தநிலையில், இந்தப் புயலுக்கு சிறிலங்காவை ஆட்சி செய்த மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட்டதற்கு சிங்கள தேசியவாதிகள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து மகாசேன மன்னனின் பெயரை இந்தப் புயலுக்குச் சூட்டியதற்காக சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் எச்.காரியவசம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

வடக்கு இந்திய பெருங்கடல் (North Indian Ocean) குழுமமானது வங்காள விரிகுடா பகுதியிலும் மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் உள்ள பங்காளதேசம், இந்தியா, மாலைத்தீவுகள், மியன்மார், ஓமான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் ஆகும் இவை இந்தப்பிராந்திய கடல்களில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுவது வழக்கம். அகரவரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் அந்தந்த நாடுகள் அளித்த பட்டியலின் படி புயல்களுக்கு பெயரிடப்பட்டு வருகிறன.

2003இல் சிறிலங்கா கொடுத்த மகாசேன மன்னனின் பெயர், தற்போது வழங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு சூட்டப்பட்டது. அனைத்துலகக் குழுவினால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் பெயரை நீக்கும்படி சிறிலங்காவினால் கோரப்பட்டுள்ளது.

எல்லாக் காலங்களிலும் புகழ்பெற்ற மன்னனான மகாசேனனின் பெயரை புயலுக்குச் சூட்டியது அவமானம் என்று மூத்த பேராசிரியர் ஜே.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மகாசேன என்ற பெயரை இந்தப் புயலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று புதுடெல்லியில் உள்ள வளிமண்டலவியல் நிலையத்துக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் இந்த முடிவுக்கு அமைச்சரின் தலையீடே காரணம் என்றும் கூறப்படுகிறது. சிறிலங்காவின் இந்த முடிவினால், வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள புயல் பெயரை இழந்துள்ளது.

Related Posts