யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன.
மரங்கள் முறிந்து விழுந்த நிலையிலும் காற்றினால் கூரைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் இத்தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது.
இதேவேளை, யாழ். மாவிட்டபுரம், மாவை கலட்டி பகுதியில் பனை மரமொன்று முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.
இந்த அசம்பாவிதங்களினால் காயமடைந்த 3 பேர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (வயது 42) சூசைதாசன் சுயந்தன் (வயது 13) மற்றும் மாவை கலட்டி பகுதியைச் சேர்ந்த தி.சதீஸ்வரன் (வயது 43) ஆகியோரே காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க புன்னாலைக்கட்டுவன், சூறாவத்தை பகுதியில் இடி வீழ்ந்துள்ளது. அரியாலையிலுள்ள நாவலடி, புங்கன்குளம், பூம்புகார், ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காலை முதல் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘மகாசென்’ புயல்!- இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தல்
வங்காள விரிகுடாவின் தென்மேற்கே உருவாகியுள்ள மகாசென் என்ற புயல் சின்னமானது இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னமானது முல்லைத்தீவில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது இலங்கையின் வடமேல் திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் இலங்கையின் காலநிலையிலும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டொரு நாட்களில் இந்த புயல் இலங்கையின் வடபகுதியை தாக்கும் வாய்ப்பும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
அத்துடன் கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.