நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைத்திருக்கும் தம்மை விடுதலைசெய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 14 தமிழ் அரசியல் கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்த நிலையிலும் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இந்தக் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மகஸின் சிறைச்சாலையிலுள்ள ஏனைய 75 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று திங்கட்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுகின்றனர் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்தியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகிய 15 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவர்களில் செல்லத்துரை கிருபானந்தன் என்ற கைதி மறுநாள் புதன்கிழமை நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டார்.
இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்று கிட்டாத வரையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையென்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து ஏனைய 14 கைதிகளும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். 14 பேரினதும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கின்றது என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த இரு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணையை வவுனியா நீதிவான் நீதிமன்றம் ஊடாக இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் சம்பந்தப்பட்ட தரப்புகளுடாக அறிவித்துள்ளதையடுத்து கைதிகள் இருவரும் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.