கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்தியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது விடுதலை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும், நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தங்கியிருந்து சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் நாம் விடுதலையை வலியுறுத்தி உயிரைத் துச்சமென மதித்தே இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, எந்தவித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை உடனடியாக விடுதலைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். கரவெட்டி வடக்கு, கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், நாவலப்பிட்டி, மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன், சந்திரன் ஆகிய இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.