“கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உதவவேண்டும்.” – இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தங்களது விடுதலையை வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மகஸின் சிறைச்சாலையிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் நேற்று திங்கட்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகின்றபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், செய்வதறியாது கண்ணீரோடு அலையும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளாகிய நாம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் எமது உறவுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோருகின்றோம்” – என்றனர்.