புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் என வித்தியாவின் தாய் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த உறுதியின்படி ஞாயிறன்று வவுனியாவில் அவர்களது குடும்பத்திற்கு என வீடு ஒன்று வழங்கப்பட்டது.
இதனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவான் விஜேவர்தன வழங்கினார்.
வவுனியா கொக்குவெளி என்ற இடத்தில் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கென புதிதாக கட்டப்பட்ட வீடுகளையும் உரியவர்களிடம் அமைச்சர் கையளித்தார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதி அமைச்சர் பிரிவினை இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியும் பங்கேற்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை.
ஆனாலும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் தனியார் உல்லாச விடுதி ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.