எனது 20 வயது மகனை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அவனை தேடி சென்ற எனது கணவனை இராணுவத்தினர் அடித்ததினால் இருதய நோயாளியான அவர் அவ்விடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்தார்’ என ஐயம்பிள்ளை பூரணம் என்ற பெண் திங்கட்கிழமை (17) சாட்சியமளித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின்முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (14) முதல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.
வெள்ளிக்கிழமை (14) கோப்பாய் பிரதேச செயலகத்திலும், சனிக்கிழமை (15) சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற இந்த சாட்சியமளிக்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (16) தொடக்கம் திங்கட்கிழமை வரை (17) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் சாட்சியமளிக்கும் போதே பூரணம் என்ற பெண் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,
‘எனது மகனான ஐயம்பிள்ளை நிரூபன் (20) மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்தார். வீட்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று வந்த அவரை மானிப்பாய் கஜபாகு இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினர் கைதுசெய்து கொண்டுசென்றனர். எனது மகனோடு பக்கத்து வீட்டிலுள்ள இரு இளைஞர்களையும் அவர்கள் கொண்டுசென்றனர் எனது மகன் பிடித்துச் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்பதற்காக குறித்த முகாமிற்கு சென்ற எனது கணவன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் இருதய நோயாளியான அவர் சம்பவ இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்தார்.
இதேவேளை எனது மகனை இராணுவத்தினர் உடுவில் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் இதனை தான் தெரிவித்ததாக வேறு எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் எனக்குத் தெரிவித்திருந்தார்.
எனது மகனுடன் பிடிக்கப்பட்ட மற்றைய இரு இளைஞர்களும் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எனது மகனை அவர்கள் விடுதலை செய்யவில்லை’ என்றார்.