மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் நிறுவனத்தால் வாழ்வாதார உதவிக்கு என வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் எத்தனை கோழிக்குஞ்சுகள் உயிருடன் இருக்கிறன என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பிய சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளிக்கும் நடவடிக்கை இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது இதன்போதே இந்த சம்பவம் நடைபெற்றது.
காணாமல் போன தனது ஒரே ஒரு மகன் குறித்து சாட்சியம் அளிக்க வந்தபோது மகன் குறித்து விபரங்களை சேகரித்துக் கொண்டவர்கள் அரசாங்க உதவிகள் ஏதாவது வழங்கப்படுகின்றதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதன்போது 25ஆயிரம் ரூபா பணமும் 20 கோழிக்குஞ்சும் வழங்கப்பட்டது எனப்பதிலளித்தார். அப்போது கோழிக்குஞ்சுகள் எத்தனை உள்ளன என ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
அவற்றில் 4மட்டுமே உள்ளன என்றும் கூறியவேளை மற்றைய கோழிக்குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்றும் கேள்வி எழுப்பினர். அத்துடன் கோழிக்குஞ்சு வளர்க்க பயிற்சி அல்லது முறைகள் சொல்லித்தரப்பட்டதா என்ற கேள்வியையும் தொடர்ந்து கேட்டனர்.
அதற்கு குறிப்பிட்ட தந்தையார் சில முறைகள் கூறப்பட்டது என்றும் அவர் மனவிரக்தியுடன் கூறியமை குறிப்பிடத்தக்கது.