மகனால் திருடப்பட்ட அலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வதிரி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி மடிக்கணிணி, கைத்தொலைபேசி, கமரா உள்ளிட்ட 1 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நெல்லியடி பொலிஸார், அலைபேசியின் ஐ.எம்.ஈ.ஐ இலக்கத்தை வைத்து அலைபேசியை பாவித்து வந்த மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்தனர்.
பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அலவாயில் வசித்து வரும் தனது மகன் இந்த தொலைபேசியை தனக்கு தந்ததாக கூறியிருந்தார்.
மகன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவர் ஏற்கனவே பிறிதொரு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இதனையடுத்து, மேற்படி பெண்ணை பருத்தித்துறை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை, பொலிஸார் ஆஜர்ப்படுத்தினார்கள்.
இதன்போது, பதில் நீதவான் அ.நடராஜா மேற்படி பெண்ணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.