இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது’ என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தடுத்து வைத்திருந்தபோது, அவர்களுக்கு ஊசி மருந்தேற்றியதாகவும், அந்த மருந்தால், தாங்கள் மிகவும் பலவீனமடைந்தவர்களாக மாறியுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வின்போது, முன்னாள் போராளியொருவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமாக ராஜித சேனாரத்ன, ‘அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை’ என்றார்.
இருப்பினும், ‘அவ்வாறு ஊசிமருந்தேற்றிய விவகாரம் தொடர்பில் அறிவித்துள்ள முன்னாள் போராளி, அந்த ஊசிமருந்து ஏற்றிய பின்னர், சக போராளியொருவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்’ என, ஊடகவியலாளர் கூறினார். அப்போது, ‘இல்லை, அவ்வாறானதொரு சம்பவம் நிகழவில்லை. அது தொடர்பில் எங்களுக்குப் பதிவாகவில்லை’ என்று அமைச்சர் கூறினார்.
இதேசமயம், ‘முன்னாள் போராளிகளை, சர்வதேச ரீதியிலான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனரே?’ என்று அந்த ஊடகவியலாளர் மீண்டும் கூறிய போது, ‘மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமாயின், அதனை சர்வதேச ரீதியில் செய்ய வேண்டியதில்லை. அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்நாட்டில் இருக்கின்றன. தேவையேற்படின், அவ்வாறானதொரு பரிசோதனையைச் செய்யலாம்’ என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் பதிலளித்த இராணுவப் பேச்சாளர், ‘பௌத்த நாட்டைச் சேர்ந்த எமது இராணுவத்தினர், மிருகத்தையேனும், விஷம் வைத்துக் கொலை செய்ய மாட்டார்கள். அவ்வாறிருக்கையில், முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறானதொரு ஊசி மருந்து ஏற்றப்பட்டதான தகவல், முற்றிலும் பொய்யானது. அவ்வாறானதொரு செயலை, இராணுவம் ஒருபோதும் செய்யவில்லை’ என்றார்.
அத்துடன், ‘நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்துவிதமான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு சமயத்தில், கடந்த 8 வருடங்களாக இல்லாத குற்றச்சாட்டுகளை, இப்போது பொய்யாக முன்வைத்து வருகின்றனர். இது, நல்லிணக்கத்தைக் குழப்பும் சதி வேலையாகும். வதந்திகளால், மக்களைக் குழப்பி, இலாபமடைவதற்கே சிலர் முயன்று வருகின்றனர்’ என்று, இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.