போலீசார் அடித்து இழுத்து சென்ற ‘‘விவசாயி பாலன் கடன் தொகையை நானே செலுத்துகிறேன்’’ நடிகர் விஷால் அறிவிப்பு

‘‘போலீசார் அடித்து இழுத்து சென்ற விவசாயி பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன்’’ என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

Actor-Vishal-ExtendVPF

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன்(வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சொந்தமாக டிராக்டர் வாகனம் வாங்க தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்றிருந்தார்.

இதில் 2 தவணை பாக்கி வைத்து இருந்த பாலனை பாப்பாநாடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரசாமியும், நிதி நிறுவன ஊழியர்கள் சிலரும் வந்து, தாக்கி டிராக்டரை ஜப்தி செய்த காட்சி இணையதளங்கள், செல்போன் ‘வாட்ஸ்-அப்’ மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.

இந்தநிலையில் விவசாயி பாலனுக்கு உதவுவதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘ பாலன் நீங்கள் யார்? என்று எனக்கு தெரியாது. ஆனால், நீங்கள் ஒரு விவசாயி. அந்த அடிப்படையில், உங்களுக்கு பண உதவி செய்ய விரும்புகிறேன். உங்களுடைய கடன் நிலுவைத்தொகை எவ்வளவு இருக்கிறது? என்று எனக்கு தெரியாது. என்னுடைய உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.

பாலனுக்கு உதவியது குறித்து, நடிகர் விஷால் கூறியதாவது:-

‘‘விவசாயி பாலன் கடன் நிலுவைக்காக இழுத்து செல்லப்பட்ட வீடியோவை பார்த்தேன். எனக்கு அது பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. எல்லோருமே கடன் வாங்கத்தான் செய்கிறோம். நான் கூட கடன் வாங்கி இருக்கிறேன். கடன் பெற்ற ஒரு விவசாயிக்கு இதுபோன்ற கஷ்டம் வரவே கூடாது.

தமிழ்நாட்டின் வேர் போன்றவர்கள் விவசாயிகள். நமக்கு பெற்றோர் சோறு போடுகிறார்கள். ஆனால், அந்த சோறு விவசாயிகளிடம் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது. எனவே தான் விவசாயி பாலனுக்கு உதவ முடிவு செய்தேன். என் சார்பில் பிரதிநிதிகளை நேரில் அனுப்பி அவருடைய கடன் தவணை தொகை முழுவதையும் அடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

14-ந்தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்

இந்தநிலையில் தஞ்சையில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க (92 விவசாய அமைப்புகள்) அவசர ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கக்கரைசுகுமார், மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போலீசாரால் தாக்கப்பட்ட விவசாயி பாலனும் கலந்து கொண்டார்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தலைவர் தெய்வசிகாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயி பாலனை, போலீசார் தாக்கியது கொடூரமானது. விவசாயியை காவல்துறை தாக்கியது மனித உரிமைகளை மீறிய செயல். அதை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதி விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரையும் திரும்ப பாலனிடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இதனை நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழக அரசு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 14-ந்தேதி காலை 10 மணி முதல் ஒரத்தநாட்டில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts