வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இளைஞர், யுவதிகளிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்த நான்கு பேரை, பத்தமேனி பகுதியில் வைத்து சனிக்கிழமை (30) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஹயஸ்வாகனமும் ஒரு தொகுதி கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் உட்பட வவுனியா பகுதியைச் சேர்ந்த ஏனைய மூன்று சந்தேகநபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த நபர், யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளிடம் வெளிநாட்டு மோகங்காட்டி பண மோசடியில் ஈடுபடுவதற்கு மிக சூத்திரதாரியாக இருந்துள்ளார்.
பத்தமேனி பகுதியில் உள்ள பெண் ஒருவரை வெளிநாட்டு அனுப்புவதாகக்கூறி முற்பணம் வாங்குவதற்கு, சந்தேக நபர்கள் சனிக்கிழமையன்று வரவுள்ளார் என்று பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்து.
ஹயஸ் வான் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்த நால்வரும் பணம் பெறுவதற்கு வந்தபோது காத்திருந்த இரகசிய பொலிஸார் இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னரான முறையில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர்கள் போலி முகவர்கள் என்று தெரியவந்ததுடன், இளைஞர்களிடம் பணம் பெற்று ஏமாற்றும் கும்பலாக இவர்கள் செயற்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இவர்கள் நால்வருக்கும் எதிராக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்து தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.