போலி நியமனக் கடிதங்கள் மூலம் வட மாகாணத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதத்தினை ஒத்த போலி நியமனக் கடிதங்களை தயாரித்து வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 63 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கான நூலக உதவியாளர்கள், முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் என்ற பதவிகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நியமனம் பெற்ற 8 ஊழியர்கள் பாடசாலை அதிபருக்கு நியமனக் கடிதங்களைக் கையளித்த போது, அவை கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதங்களை விட மாறுபட்டு இருந்தமையால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த கடிதங்கள் போலி நியமனக் கடிதம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசேட விசாரணை ஆணைக்குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.