புன்னாலைக்கட்டுவன் தெற்கு பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் ஒருவர் வசமாக மாட்டியுள்ளார்.
கடந்த வாரம் புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சென்ற குறித்த இளைஞன்,தன்னைப் பொது சுகாதாரப் பரிசோதகர் எனக் கூறி, உணவகங்களில் உணவுகள், சிற்றுண்டிகள் என்பவற்றை பணம் கொடுக்காமல் உண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஏனைய கடைகளுக்குச் சென்று லஞ்சமாக பணத்தை பெறும் நடவடிக்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த இளைஞன் நேற்று வாகையடியில் உள்ள கடை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அக்கடையில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அதற்காக கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் மிரட்டியுள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு உரிமையாளரிடம் ஐயாயிரம் ரூபா பணத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர் அவரை நாளை (நேற்று முன்தினம்)வரும்படி கூறியுள்ளார். அத்துடன் பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவற்றுக்கு இது தெடர்பாக கூறியுமுள்ளார்.
இன்று (நேற்று) பகல் அந்த இடத்திற்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்ட நபர் பணம் வாங்குவதற்கு வந்தவேளை கையும்மெய்யுமாகப் பிடித்து, சுன்னாகம் பொலிஸில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.