போலியான கம்பனி ஒன்றுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் செய்துகொண்ட மீள் காப்புறுதி காரணமாக அதற்கு 208 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்திருக்கின்றார். கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த அறிக்கையை அரசாங்க நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) நேற்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்தது.
இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பாக ட்ரான்ஸ் ஏசிய மெனேஜ்மன்ட் அட்வைஸர் என்ற போலி நிறுவனத்துடன் இந்த மீள் காப்புறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த கம்பனி போலியானது என்ற தகவல் 2006இல் இணையத்தில் வெளியாகியிருந்தது என கோப் கூறியுள்ளது.
பிரதீப் காரியவசம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த போது இந்த போலி காப்புறுதி செய்யப்பட்டது என ஐ.தே.க. எம்.பி ஹர்ஷ டி சில்வா கூறினார்.
பிரதீப் காரியவசம், பங்குச்சந்தை உட்பட பல விடயங்களில் விசாரிக்கப்பட்டு வருபவராக உள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் புனிதமானவை என ஏற்கப்பட வேண்டுமென இல்லை எனவும் கோப் பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டுமெனவும் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.
அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தின் பின் நிறைவேற்று அதிகாரமிக்கவருக்கு விசுவாசமானவரே கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்படுகிறார் என ஹர்ஷ டி சில்வா கூறினார்.