போலி ஆவணங்களுடன் காணிகள் வழங்கிய டக்ளஸ், விமல் – விஜயகலா

யாழ்ப்பாணம், நாவற்குழியில் வழங்கப்பட்ட காணிகள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரினால் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

நாவற்குழி மேற்கு புதிய குடியிருப்பு மக்களை வியாழக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பணத்துக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், குருநகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டட புனரமைப்பு விழாவில் கலந்துகொண்ட போது நாவற்குழியில் உள்ள வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியை 7பேருக்கு பங்கீடு செய்து காணி உறுதிகள் வழங்கி இருந்தனர்.

அன்றைய தினம் அவர்களால் வழங்கப்பட்ட அந்தக் காணி உறுதிகள் போலியானவை. அவை கொழும்பில் இருந்து இராணுவ தரப்பினரால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டவை ஆகும்’ என்றார்.

அந்த உறுதிகள் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் வினாவிய போது குறித்த உறுதிக்கும் பிரதேச செயலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என என்னிடம் தெரிவித்தார்.

அதேபோன்று மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொண்ட போது அவ்வாறு உறுதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் எந்த பதிவுகளும் இங்கில்லை என தெரிவித்தனர்.

எனவே, அந்த உறுதிகள் மக்களை ஏமாற்றும் நோக்குடன் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டவை ஆகும். அதனால் அந்த உறுதிகளை உத்தியோகபூர்வமான விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது உள்ளது என அவர் கூறினார்.

இதேவேளை,

யாழ்ப்பாணம், நாவற்குழியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்ற மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் சிறு பகுதி கூட தமக்கு வழங்கப்படுவதில்லை என அந்த பகுதியில் குடியேறியுள்ள தமிழ் மக்கள், மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் கவலை தெரிவித்தனர்.

நாவற்குழி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் அந்த பகுதியில் குடியேறியுள்ள மக்களை வியாழக்கிழமை (12) பிரதி அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியபோதே, மக்கள் இவ்வாறு கூறினர்.

நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் 110 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எமக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் பெற்றுத்தரப்படவில்லை. அருகில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு செய்யப்படுகின்ற உதவிகளில் சிறிதளவு கூட எமக்கு செய்வதில்லை.

எமக்கான தொழில்கள் இல்லை. வாழ்வாதாரம் அற்ற நிலையில் வீட்டு திட்டங்கள் கூட வழங்கப்படாத நிலையில் இப்பகுதியில் வாழ்கின்றோம். எமது குடியிருப்புகளை சுற்றி பற்றை காடுகள் காணப்படுவதனால் விஷ ஐந்துக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். வடக்கின் வசந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சார வசதியை தவிர வேறு எந்த வசதிகளும் எமக்கு செய்து தரப்படவில்லை.

எம்மை இங்கு குடியேற்றும் போது எமக்கு மாளிகைகள் கட்டி தருவது போல கூறியே எம்மை இங்கு அழைத்து வந்து குடியேற்றினார்கள். ஆனால் இதுவரை மலசலகூடம் கூட எமக்கு கட்டித்தரவில்லை. இப்போது தான் எமக்கு அவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக எம்மை இங்கு கொண்டுவந்து குடியேற்றியுள்ளார்கள் என்பது எமக்கு தெரிகின்றது.

இந்த முத்தமிழ் சனசமூக நிலையம் கூட ஒரு தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முத்தமிழ் என பெயர் சூட்டியதும் அந்த தொண்டு நிறுவனம் தான். அந்த பெயர் இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு பிடிக்கவில்லை.

அந்த பெயரை மாற்றும் மாறு எமக்கு அச்சுறுத்தல்கள் விடுத்தனர். அதற்கு நாம் அஞ்சாது இந்த பெயரை உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சனசமூக நிலையத்தை முத்தமிழ் சனசமூக நிலையம் என சட்டரீதியாக பதிவு செய்வதற்கு உதவுமாறும், அடிப்படை வசதிகளை மிகவிரைவாக செய்து தரும்படி கேட்டுக்கொள்வதாகவும் அந்த மக்கள் கோரினர்.

Related Posts