போலியான பிரசாரங்களை மேற்கொள்ளும் பேஸ்புக்காரர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை!

முகநூல் ஊடாக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப்பிராசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இவ்வாறான 50 முகநூல் கணக்குகளின் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முகநூல் ஊடாக பாரியளவில் போலிப் பிராசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது. இவ்வாறான போலிப்பிராசாரங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?, யார் அவற்றுக்கு நிதி வழங்குகின்றனர்? என்பன தொடர்பில் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறான தகவல்களுக்கு அமைய 50 முகநூல் கணக்குகள் முடக்கப்படவுள்ளதுடன் அதனை நடத்தியவர்களை நாங்கள் விரைவில் அம்பலப்படுத்தவுள்ளோம்” – என்றார்.

Related Posts