போலித் தொலைபேசி அழைப்பால் தொலைபேசி வெடிக்குமா??

4 அல்லது 13 எண்களில் தொடங்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி செய்தியினால் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

SLCERT சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல இந்த விடயம் தொடர்பாக பல அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எந்த சூழ்நிலையிலும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கும் போது உங்கள் தொலைபேசி உடனடியாக வெடிக்கும்.இது ஏற்கனவே நடந்தது, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பலர் இறந்துள்ளனர். 13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம், மேலும் இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும் என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து கையடக்கத் தொலைபேசிகள் வெடித்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

உற்பத்திக் குறைபாட்டினால் தொலைபேசி வெடிக்கக்கூடும், ஆனால் அழைப்பால் அப்படி எதுவும் ஏற்படாது என்றும், இதுபோன்ற தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

13 அல்லது 4 எண்களில் தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Posts