போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது – இரா சம்பந்தன்

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ஆம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பை சாதகாமானதாகப் பார்க்கிறார். ஆனால் போரில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் , சிறையில் இருப்பவர்கள் என்று போர் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற குறியீட்டளவிலான அறிவிப்புகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

´இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். யுத்தம் இடம்பெற்றது துரதிஸ்டவசமானது. யுத்தம் நடைபெற்றிருக்கக் கூடாது. நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் யுத்தம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காது. மிதவாத தலைவர்கள் இப்பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். நீண்ட காலம் யுத்தம் நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. இதற்குப் பின் யுத்தத்தின் அடிப்படையில் கொண்டாட்டங்களை நடத்தப்படுவதை ஒரு பொறுத்தமற்ற விடயமாக நாம் பார்க்கிறோம்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசு வெற்றியை உயிருடன் வைத்திருப்பதற்காக வெற்றியை மக்கள் மத்தியில் வைத்திருப்பதற்காக அதனை கொண்டாடினர். தற்போதைய அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு சிறந்த முடிவு. ஏனென்றால் அந்த தினத்தில் கொடூரமான யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாங்கள் எங்கள் மரியாதையை செலுத்துவோம். அவர்களது சார்பில் அதனை துக்க தினமாக அனுஸ்டிக்க முடிவெடுத்துள்ளார்கள். இது மிகவும் சிறந்த முடிவு.

எவருக்கும் எவ்வித வேற்றுமையும் ஏற்படாமல் இறந்தவர்கள் அனைவரையும் மதிப்பதன் மூலமாக யுத்தத்தின் கொடூரங்களை மறந்து இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக புரிந்துணர்வு நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஆரம்ப நிகழ்வாக இது அமையும். அரசாங்கத்தின் இந்த முடிவை வரவேற்கிறோம். எல்லோரும் அமைதியாக இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அதனை ஒரு துக்க தினமாக அமைதியாக பக்குவமாக அனுஸ்டிப்பது பொறுத்தமாக இருக்கும் என கருதுகிறோம்.

ஆனால் இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பல கருமங்கள் இன்னும் இருக்கின்றன. காணாமல் போனோர் தொடர்பில் ஒரு முடிவு வர வேண்டும். சிறையில் உள்ள கைதிகள் சம்பந்தமாக ஒரு முடிவு வர வேண்டும். விதவைகள் சம்பந்தமாக பெற்றோரை இழந்த பிள்ளைகள் சம்பந்தமாக ஒரு மாற்றம் ஏற்பட வரவேண்டும்.

அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதம். இந்த கருமங்களை செய்வதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். 100 நாள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள். பல விடயங்களை செய்துள்ளார்கள். தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்´ என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதான தமிழ் கட்சியின் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ் சிவில் அமைப்புகள் இது குறித்து சற்று மாறுபடுகின்றன. பிரிட்டனில் உள்ள ஊடகவியலாளர் நடராஜா குருபரன், இந்த அறிவிப்பு அரசியல் காரணங்களால் வந்திருக்கிறது என்கிறார். ஆனாலும் குறியீட்டளவில் இது வரவேற்கத்தக்கதுதான் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

Related Posts