போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது : பொ.ஐங்கரநேசன்

ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. தமது கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, பெற்றோர்களது கடமைகளையும் சேர்த்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மனப்பூர்வமாக இந்தப் புண்ணிய கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்ற ஆசிரியர்கள் தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படக் கூடியவர்கள் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் ஆசிரியர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

நீர்வேலி சி.சி.த.க. பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (06.10.2017) அதிபர் தி.ரவீந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர்தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது தேசத்தின் எதிர்காலம் இன்றைய மாணவர்களிலேயே தங்கியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளில் கூடுதலான புள்ளிகளைப் பெறுதல் என்பதற்கும் அப்பால், எமது மாணவர்கள் பன்முக ஆளுமை கொண்டவர்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும், மண்பற்று மிக்கவர்களாகவும்வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், நாம் முன்னர் ஒருபோதும் கேட்டிராத அளவுக்கு மாணவர்கள் பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பட மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்தவகையில், மாணவர்களை நேரான சீரியபாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பை ஆசிரியர்கள் சுமந்து நிற்கிறார்கள்.

யுத்தம் நடைபெற்ற பூமியில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெற்றோர்களை இழந்துள்ளார்கள். இன்னும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெற்றோர்கள் இருந்தும் பெற்றோர்களின் கவனிப்புக் கிட்டாத சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். வறுமை காரணமாக கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்பாகவே வேலைக்குப் புறப்பட்டுச் சென்று அந்திசாயும்போதே வீட்டுக்குத் திரும்புகின்றனர். இதனால் தங்கள் பிள்ளைகளைக் கவனிக்க முடியாத நிலையிலேயே உள்ளார்கள்.

கிராமப்புறங்களில் பாடசாலைக்கு வருவதற்கு முன்பாகவும், பாடசாலையால் வீடு திரும்பியதும் தம் பெற்றோருக்கு ஒத்தாசையாக வேலைக்குப் போகும் பிள்ளைகளும் உள்ளார்கள். பாடசாலையில் வழங்கப்படும் மதிய உணவை நம்பியே பாடசாலைக்கு வரும் மாணவர்களும் இருக்கிறார்கள். வசதிவாய்ப்புகள் உள்ள குடும்பங்களிற்கூட பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாததால் நவீன தொடர்பாடல் சாதனங்களுக்கு அடிமையாகிச் சீரழியும் மாணவர்களும் உள்ளார்கள்.

மாணவர்கள் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு மாத்திரம் அல்ல் ஒட்டுமொத்த சமூகமுமே நாளை இருட்டுக்குள் தள்ளப்பட்டுவிடும். எனவே எமது ஆசிரியர்கள் பாடத்திட்டத்துக்கும் அப்பால் சென்று தமது பிள்ளைகளைப் போன்றே மாணவர்களையும் அன்பால் அரவணைத்துக் கவனிக்கவும், கண்காணிக்கவும் வேண்டும். தங்களை வகுப்பறையில் பெற்றோர்களாகவே உருவகிக்கும் நல்லாசரியர்களின் பணி போருக்குப் பிந்திய கால கட்டத்தின் கட்டாய தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts