சென்னை ஐகோர்ட்டில், கணேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– ‘போர்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியுள்ளேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு, திரைபட தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்தேன்.
இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி இந்தியா-இலங்கை நட்புறவுக்கு கேடு விளைக்கும் விதமாக உள்ளது. போரில் இளம் பெண் இசைப்பிரியா கற்பழிக் கப்படுவதுபோன்ற காட்சிகள் உள்ளன என்று காரணம் கூறி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை (சென்சார்) வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். வழக்கு விசாரணையின்போது தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
‘புலி பார்வை, ‘மெட்ராஸ் கபே’ என்று பல படங்களுக்கு சான்றிதழ் வழங்கும்போது, இந்த படத்துக்கு ஏன் வழங்கவில்லை? தற்போது தணிக்கை வாரியத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களா உள்ளனர். அவர்கள் யார் யார்? அவர்களது பெயர் உள்ளிட்ட அனைத்த விவரங்களையும் மத்திய தணிக்கை வாரியம் தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற 26–ந் திகதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று கூறினார்.