ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் – ஹுசைன் போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கவே இலங்கை வருகிறார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பொரளை எம்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளை இல்லாதொழிக்க அவரின் குடும்பத்தினருக்கு எதிரான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. வரலாற்றில் குறுகிய காலத்தில் மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசும் இதுதான்.
நாட்டை ஆட்சிசெய்ய இவர்களால் முடியாதுள்ளது. பொருளாதரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைகின்றது. அதனை திசை திருப்பும் நடவடிக்கைகளே மஹிந்த குடும்பத்தினருக்கு எதிரானக் குற்றச்சாட்டுகளும் கைதுகளும் ஆகும். யோஷிதவுக்கும் சி.எஸ்.என் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மஹிந்தவை இல்லாதொழிக்க யோஷிதவை கைதுசெய்கின்றனர். இதற்கு பிரதான செயற்பாட்டாளர்களாக ஜே.வி.பியினர் உள்ளனர். நாட்டில் நீதித்துறை ஒடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி குற்ற விசாரணைப்பிரிவு என்ற சட்டவிரோத பிரிவை அமைத்து மஹிந்தவை அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த ஏகாதிபத்திய அரசை நாம் தோற்கடிக்கவேண்டும்.
சர்வதேசத்திற்கு இந்த அரச தரப்பினர் எமது தாய் நாட்டை காட்டிக்கொடுக்கின்றனர். போர்க்குற்ற நீதிமன்றத்தை ஸ்தாபிக்கின்றனர். இவற்றுக்கு எதிராக தேசிய இனமாக நாம் எழுச்சியடைய வேண்டும்.
எதிர்வரும் 5ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இலங்கை வருகின்றார். இவர் வருவது வேறு எதற்கும் இல்லை. நாட்டைப் பாதுகாத்த தலைவர்களையும், இராணுவத்தினரையும் தண்டிப்பதற்காக போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை நிறுவவே இவர் இலங்கை வருகின்றார். இதற்கு நாம் இடமளிக்க முடியாது” – என்றார்.