உள் விசாரணை தமிழர்களுக்கு நியாயமான தீர்வைத் தராது. ஏனெனில், உள் விசாரணை பொலிஸிடம் வந்து நிற்கும். இதுவே இலங்கையின் சட்டம். இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடியளவுக்கு சட்டங்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார்.
‘உள் விசாரணை மேற்கொள்ளாது, சர்வதேச விசாரணையை கட்டாயம் செய்யப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துவது சரியானது. உள் விசாரணையால் எங்களுக்கு தீர்க்கமான முடிவுகள் ஏற்படாது’ என்றார்.
‘தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றும் இணைந்து மேற்கொண்ட சந்திப்பில், கூட்டமைப்பை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மிகுதி கட்சிகள் இணைந்து பதிவு செய்வதற்கான முடிவுகள் எட்டப்பட்டதா’ என அவரிடம் வினாவியபோது,
‘தமிழரசுக் கட்சியை தவிர்த்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இணைந்து தனியாக கூட்டமைப்பை பதிவு செய்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவு எதனையும் இதுவரையில் எட்டவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டமே நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளவில்லை. நாங்கள் தமிழரசுக் கட்சியை புறக்கணிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி, ஒற்றுமையாகச் செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என முடிவு எடுத்திருந்தோம்’ என்றார்.