போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்’ என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுதல், தேசிய நல்லிணக்கம் மற்றும் சர்வதேசத் தரம்வாய்ந்த நம்பகமான நீதிப் பொறிமுறைகளை அபிவிருத்தி செய்தலின் ஊடாக அமைதியைக் கட்டியயழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், இலங்கையில் நல்லிணக்கச் செயல்முறைகளை முன்னேற்றுவதற்கான ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது குறித்து தற்போது கலந்துரையாடப்படுகின்றது.
எல்லா முக்கிய பங்காளர்களினதும் பங்கேற்பு ஆலோசனை மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையிலேயே எப்போதும் ஐ.நாவின் உதவி அமைந்திருக்கும்.
வடக்கு, கிழக்கில், அரசால் கைப்பற்றப்பட்டு மீளளிக்கப்பட்ட நிலங்களில் மீள்குடியமர்வுக்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை ஒருங்கிணைப்பதற்கும் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக இலங்கை அரசு மற்றும் எல்லா பங்களாளர்களுடனும் ஐ.நா.வின் உதவி தொடர்பான விவரங்களை இறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை ஐ.நா. மேற்கொண்டு வருகின்றது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தரம்வாய்ந்த நம்பகமான பொறுப்புக்கூறல், நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குவதற்கான ஐ.நா. உதவியும், இலங்கை அரசு மற்றும் சகல பங்காளர்களுடனும் இணைந்த ஆலோசனைச் செயல்முறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.