போர்க்களத்தில் ஒரு பூ திரப்படத்தை வெளியிட இலங்கை அரசு தடுக்கிறது!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரப்படத்தை வெளியிடுவதை இலங்கை அரசு தடுத்துவருகிறது என திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார். பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கூறியதாவது,

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையில் பத்திரிகையாளர் இசைப்பிரியா குரூரமாக கொலை செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக பல ஆவணப்படங்களை சனல் 4 தொலைக்காட்சியில் பத்திரிகையாளர் கல்லம் மக்ரே வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கு.கணேசன் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஆனால் இந்தத் திரைப்படத்தை வெளியிட விடாமல் சென்சார் போர்ட் மூலமாக தடுத்துவருகிறார்கள். ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படம் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படம் ஒரு சாதாரண பெண்ணின் கதையல்ல. மாறாக போரில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையாகும்.

இசைப்பிரியாவுக்காக நீதி கேட்கும் படம். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றத்துக்கு எதிராக இத்திரைப்படம் உரிமைக்குரல் எழுப்பியுள்ளது.

இந்த போராட்டத்தில் மனிதநேயம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இணைந்து கொள்வார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தை திரையிடுவதை தடுப்பதற்கு சென்சார் போர்டு மூலமாக இலங்கை அரசாங்கம் மறைமுகமாக முயற்சித்து வருகிறது.

எனினும் சென்சார் போர்டு விதித்துள்ள தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ச.துரைசாமி வாதாடிவருகிறார். இவ்வாறு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

Related Posts