“போர்க்களத்தில் ஒரு பூ” : உண்மைக்கு புறம்பான கதையா?? – இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்:

isaippiriyaa2_esai-pireya

இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்த பொழுது இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட திருமதி சோபனா அவர்களது புகைப்படங்களும் கானொளிகளும் ஊடகங்களினால் நாகரிகமற்ற முறையில் புனை கதைகளுடன் வெளிவருவது குறித்து எமது மனவருத்தத்தினையும் கண்டனத்தினையும் ஏற்கனவே தமிழ் ஊடகங்களில் இசைப்பிரியா குடும்பத்தினர் சார்பாக நாம் தெரியப்படுத்தியிருந்ததை நான் திரும்பவும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

எனது தங்கையான இசைப்பிரியாவை நாம் எல்லோரும் அறிவோம்.அவர் தமிழர் மீதான இறுதியுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்.அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முழுநேர உறுப்பினராக இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியிருந்தார்.அவராக விரும்பி போராட்டத்தில் இணைந்தவர்.அவர் இதயபலவீனமானவர் என்பதனால் குடும்பத்தினரான நாம் அவரை எம்முடன் வாழ்வதையே விரும்பியிருந்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அவரை வீடு செல்லவே பணித்திருந்தனர்.ஆனால் இசைப்பிரியாவோ தான் ஏதாயினும் தமிழருக்கு செய்யவேண்டுமென அமைப்பிலேயே இருந்து பத்தாண்டு காலம் கடும் பணியாற்றியிருந்தார். திருமணம் செய்து ஒரு குழந்தையின் தாயாரும் ஆவார்.எமது குடும்பம் எக் கால கட்டத்திலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்ததில்லை.கடைசி யுத்த காலத்தில் கூட நாம் போதியளவு பணத்தினை எம் வசம் வைத்திருந்தோம். நாம் குழந்தைப் பிள்ளகளுடன் இருந்த படியால் பிள்ளைகளுக்கு தேவையான உணவுகளையே பெரிய பொதிகளில் சேகரித்து இடத்திற்கு இடம் காவிச் சென்றோம். இசைப்பிரியாவிற்கும் எனக்கும் மே 2009 மாத த்தில் தொடர்பு இல்லாமல் போய்விட்டிருந்தது. நான் அவரைப் பிரியும் போது எனது கையில் 36நாட்களான எனது மகள் இருந்திருந்தாள்.இறுதியான அந்த 03 வாரங்களும் இசைப்பிரியாவிற்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.ஆனால் எமது கடைசித் தங்கை மே மாதம் 16ம் திகதி வரை இசைப்பிரியாவுடன் இருந்திருந்தார். அவர் சொன்ன தகவல் “இசைப்பிரியா தனது பையில் எனது மகளுக்கு ஆக ஒரு SMA tin ஐ வைத்தே இருந்தாராம்.என்னைச் சந்திக்கும் பொழுது தருவதற்காக”

போர்க்களத்தில் ஒரு பூ படத்தினைப் பற்றிய செய்தியை கேட்டால் ஏதோ குடும்பக் கதையை எழுதுகிறாரே என நினைக்கிறீர்களா!!!!

ஆம் மேலுள்ளது இசைப்பிரியாவின் வாழ்க்கையின் உண்மைக்கதை. போர்க்களத்தில் ஒரு பூ இயக்குனர் எழுதிய புனைகதையோ வேறு.உண்மைக் கதை கொஞ்சமாவது உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதற்காகவே இப்படி ஆரம்பித்துள்ளேன்.

எனது தங்கையின் கதை தமிழகத்தில் திரையாக்கப்படுகிறதென தமிழகத்திலுள்ள நண்பர் ஒருவர் மூலமாக 2014ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் அறிந்தேன்.அந்த நிமிடமே அந்த இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எமது குடும்பக் கதையைப் படமாக்க எமக்கு விருப்பமில்லை.எம்மிடம் அனுமதி பெறாமல் இதனை நீங்கள் ஆரம்பித்தது தவறெனச் சுட்டிக்காட்டினேன்.எமது குடும்பத்தின் கதை தங்களுக்கு தெரியச் சந்தர்ப்பமில்லை.திரைப்படத்தில் வருவது இலகுவாக மனங்களில் பதிந்துவிடும்.ஏனெனில் எனக்கு வீரபாண்டியகட்டப்பொம்மனைத் தெரியாது,அவரது வேடம் பூண்ட சிவாஜி கணேசனையும் அப்படத்தில் சொல்லப்பட்ட கதையையுமே நான் இன்று வரை அவரின் வரலாறாக நினைக்கிறேன்.எனது தங்கை இறுதி வரை அவராகவே வாழ வேண்டும் என்பது குடும்பத்தாரின் விருப்பம்.எமது அழகோவியத்தை வேறொருவர் உருவில் காண எமக்கு விருப்பமில்லை.அதைவிட அவருக்கு இறுதியாக என்ன நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமுமே இல்லை.ஆனால் அவரது மரணம் இறுதி யுத்தக் குற்றத்திற்கான ஶ்ரீலங்காவிற்கெதிரான ஆதாரமாகவுள்ளது.பிழையான கருத்துக்களால் அவ் ஆதாரம் சிதைக்கப்படக்கூடாது.இவற்றை இயக்குனர் கணேசன் அவர்களிடம் விளங்கப்படுத்தினேன்.

அதற்கு அவர், கனடாவில் உள்ள எமது சித்தி ரஞ்சினி என்பவர் இப் படம் எடுப்பதற்கு தனக்கு அனுமதி தந்தாகவும், எம்மை எல்லா இடத்திலும் தேடியதாகவும், தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் , அதனாலேயே சித்தியிடம் தான் பேசியதாகவும், சனல் 4ல் வந்த செய்திகளை வைத்தே தான் கதை அமைத்துள்ளதாகவும், இசைப்பிரியாவிற்கு நடந்த கொடுமை வெளியுலகிற்கு கொண்டு வரப்படவேண்டுமென்றே தான் இப் படத்தினை எடுப்பதாகவும் தெரிவித்தார்.சனல் 4ல் நாம் லண்டனிலிருக்கும் செய்தி எமது செவ்வியுடன் வெளியானதே அப்படியிருக்க நீங்கள் ஏன் கனடாவிலிருக்கும் சித்தியிடம் அனுமதி பெறவேண்டுமெனக் கேட்ட பொழுது அவர் எவ்வித பதிலுமளிக்கவில்லை.அந்தச் சித்தி சிறு வயதிலேயே வெளிநாடு சென்றவர்.இசைப்பிரியாவின் வரலாறு அவருக்கு தெரியாது என்பதையும் தெளிவுபடுத்தினேன்.தான் இலாப நோக்கில் படம் எடுக்கவில்லை தேசப்பற்றில் எடுப்பதாகச் சொன்னார்.
நாம் முள்ளிவாய்க்காலில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் எனக் கேட்ட பொழுது ,தான் தேசப்பற்றாளன் எனவும் ,தலைவர் பிரபாகரனை தான் 1984ம் ஆண்டே சந்தித்துள்ளதாகவும், தானும் பாதிக்கப்பட்ட தமிழன் எனவும் தன்னைத் தடுக்க வேண்டாமெனவும் தான் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் இந்தப் படத்தை எடுத்தே தீருவேனெனவும் கூறினார்.என்னால் தொடர்ந்து அவருடன் வாக்குவாதம் செய்யமுடியவில்லை, அவரது பேச்சு என்னை மிகவும் கலங்கவைத்தது.தொலைபேசியினைத் துண்டித்து விட்டேன்.எனது நண்பரை என் சார்பாக அவருடன் பேச சொல்லியிருந்தேன்.அவரும் எமது நிலமையை அவரிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.இசைப்பிரியாவை அந்த இயக்குனர் மதித்திருந்தால் நிச்சயமாக அவ் இலக்கத்தில் எம்முடன் தொடர்புகொண்டிருப்பார்.இன்று வரை அந்த இலக்கம் இணைப்பிலேயே உள்ளது.அவருக்கு எமது உணர்வுகளின் வலி பெரிதாகத் தெரியவில்லை.அல்லது புரியவில்லை.

கடந்த ஆண்டு பங்குனி மாத இறுதியில் கனடாவில் ட்ரெய்லர் வெளியிடமுற்பட்ட பொழுது நலன்விரும்பிகள் உதவியுடன் தடுத்தோம்.அப்பொழுதும் எமது அம்மா அங்கிருந்த எமது உறவினரின் தொலைபேசி மூலம் கணேசன் அவர்களுடன் கதைத்திருந்தார்.இப்படத்தினை இயக்கவோ வெளியிடவோ நாம் அனுமதிக்கமாட்டோமெனத் தெளிவாக கூறியிருந்தார்.

அடுத்து பிரான்ஸ் வந்த பொழுது ஒன்றரைக் கோடி கொடுத்தால் படம் எடுப்பதை நிறுத்திவிடுவதாக கூறியிருந்தார்.ஒரு தேசப்பற்றாளன் தனது தேசப்பற்றை அங்கு விலை பேசியிருந்தார்.லண்டனில் இசை வெளியிட முற்பட்டார்.வெளியீட்டாளர்கள் எமது வேண்டுகோளை ஏற்று அதனைத் தடுத்துவிட்டனர்.

இதிலிருந்தே நாம் ஒன்றைத் தெளிவாக உணரமுடிகிறது.பல வழிகளிலும் நாம் தடுக்கிறோம் இதனை கணேசன் பல சந்தர்ப்பங்களில் நன்கு அறிந்திருந்தார்.எமது நிலையைத் தயவாக கூறியிருந்தோம்.இசைப்பிரியாவின் உண்மைக் கதை என்று படம் எடுக்க வேண்டாமெனத் தெளிவாக கூறியிருந்தோம்.இவர்கள் என்ன செய்யமுடியுமென தொடர்ந்தும் அலட்சியத்தையே கடைப்பிடிக்கிறார்.

ஏப்ரல் 2014ல் குமுதம் இணைய தளத்தில் நானும் அம்மாவும் எமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தோம்.தடுக்குமாறு தமிழகத்தைக் கேட்டிருந்தோம்.

ஆனாலும் கணேசன் இசைவெளியீட்டைச் செய்திருந்தார்.ஒரு உண்மைக் கதை படமாக்கப் படும் பொழுது அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையோ அல்லது இது இசைப்பிரியாவின் உண்மைக் கதை தானோ என்று அறியாமல் இசைஞானியும் பாட்டெழுதி இசையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.அது அவர் இசைப்பிரியா என்னும் பெண்ணுக்கு செலுத்திய அஞ்சலி அல்லது இசைவணக்கம்.மிகவும் அருமையான பாடல்கள்.அதைக் கூட இந்த கணேசன் என்னும் கன்னட இயக்குனர் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வசூலுக்காகவும் கழிவிரக்கத்தைத் தூண்டுவதற்காகவும் அவர் அமைத்த புனைகதையை புனிதமாக்க உண்மையாக்க அம்மேதையின் இசையை வீண டித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழினமும் இப் படத்தினைத் தடுத்து நிறுத்த எமக்கு உதவ்வேண்டுமெனக் கேட்டு எமது அம்மா பேசியிருந்த ஒலிப்பதிவு ஆனது குளோபல் தமிழ் செய்திகள் எனும் இணையதளத்தில் எமது உறவினர் ஒருவரின் உதவியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இனி இப்படம் இயக்கி முடிக்கப்படாது எனும் நம்பிக்கையோடு நாம் இருக்கும் பொழுது,இப்படம் தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்தோம்.இவ்வளவு முயன்றும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதே என மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது.மிகுந்த மனவுளைச்சலுக்கள்ளானோம்.

அண்மையில் ஐநா மன்றுக்கு இப் படத்துடன் கணேசன் கிளம்பியிருந்தார்.படத்தினை வெளியீடு செய்யவிளைந்தார். மீண்டும் எமது போராட்டம் ஆரம்பித்துவிட்டது.அங்கு சிலருக்கு இப்படத்தினை 20நிமிடமாகச் சுருக்கிப் போட்டுக்காட்டியுள்ளார்.அதைப் பார்த்து விட்டு வந்த சில பெண்கள் எம்முடன் மறுநாளே தொடர்பு கொண்டு பேசினர்.இவ் இயக்குனருக்கு எதிராக மானநட்ட வழக்குப் போடுங்கள்.இப்படத்தினை வெளிவரவிடாதீர்கள்.உங்கள் குடும்பக் கதை, போராளிகளின் தியாகம்,ஒழுக்கம் எல்லாமே இதில் உண்மைக்குப் புறம்பாக க் காட்டப்பட்டுள்ளது என்றார்கள்.

போர்க் களத்தில் ஒரு பூ என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள இசைப்பிரியாவின் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்,மூத்த சகோதரியான என் குடும்பம், இளைய சகோதரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் புகலிடம் கோரி அகதி அந்தஸ்தில் வாழ்கிறோம்.சொந்தநாட்டில் எமது உயிருக்கு பாதுகாப்பில்லை.அப் படியிருக்க போராட்டத்தில் இணைந்திராத இசைப்பிரியாவின் மூத்த சகோதரியான என்னை இப்படத்தில் போராளியாக க் காட்டப்பட்டு ஏற்கனவே தந்தை இல்லாத என் குழந்தைகளின் தாயின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளார்.

நந்திக் கடல் வரை உடுப்புப் பொதியில் குழந்தைக்கான பால்மாவுடன் திரிந்த இசைப்பிரியாவை பால்மாவுக்கு கடைகடையாக பிச்சை எடுப்பதாக க்காட்டியுள்ளார்.

இறுதி வரை வெளிநாட்டில் வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் எமக்காக நிதியுதவி செய்து கொண்டேயிருந்தார்கள். கடைசிவரை கஞ்சியாவது மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த விநியோகத்திலும் ஒழுங்கமைப்பிலும் உணவுப் பொருட்களை இடத்துக்கிடம் மாற்றுவதிலும் ஈடுபட்டு எத்தனையோ உயிர்கள் மாண்டுள்ளன. அவர்கள் தியாகங்களை இப் படம் கொச்சைப்படுத்துகிறது. நானோ இசைப்பிரியாவோ போராளியாக இணையும் போது எம் தாயார் மிகுந்த மகிழ்வோடு அதை வரவேற்பதாகக் காட்டப்படுகிறதாம். எம் தாயின் தாய்மையும் மென்மையும் எமக்கான அர்ப்பணிப்பும் இவ் இயக்குனரின் புனைகதையில் நசுக்கப்பட்டுள்ளது. மறுவீடு செல்லும் மகளுக்காக கண்ணீர் சிந்திப் பிரிவு வலியில் தவிப்பவள் தமிழ் அன்னை. தன் பெண், போராளியான செய்தி கேட்டு தோள்களைக் குலுக்கிக் கொள்ள எம் அம்மா ஜான்சி ராணி அல்ல. கடந்த 17 ஆண்டுகளாக இசைப்பிரியாவிற்காக ஏக்கங்களையும் கனவுகளையும் நினைவில் மட்டுமே சுமந்து கொண்டிருப்பவள். தான் ஆரத்தழுவ என் மகள் வேண்டும். நான் சோறு ஊட்ட என் மகள் வேண்டும். என தேடும் ஒரு சாதாரண தாய். அந்தத் தாயின் உண்மைத் தன்மையும் அங்கு போலியாக்கப்பட்டுள்ளது.

பிறகெப்படி இப்படம் இசைப்பிரியாவின் உண்மை வரலாறு ஆகும்?

இசைப்பிரியா இராணுவத்தால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக இப் படத்தில் காட்டப்படுகிறதே அதற்கு கணேசனிடம் ஆதாரம் இருக்கிறதா?இதை நாம் கணேசனிடம் மட்டுமல்ல சனல் 4 உள்ளிட அனைவரையுமே கேட்டுள்ளோம்.எவராலும் எமக்கு பதிலளிக்க முடியவில்லை.அதனால் தான் நாம் கேட்கிறோம் இசைப்பிரியாவிற்காக சோடிக்கப்பட்டுள்ள வரலாறு என்றுமே உண்மை வரலாறு ஆக முடியாது. ஆகையால் இசைப்பிரியாவின் உண்மை வரலாறை எவருமே படமாக்க முடியாது.

இந்த விடுதலைப் போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகள்,பொதுமக்கள் மரணமடைந்துள்ளார்கள்.தியாகம் என்பது எல்லாராலும் இணைந்து செய்யப்பட்டது. இசைப்பிரியா, இசைப்பிரியா என எதற்கெடுத்தாலும் கோசமிட்டு எம் மன ரணத்தை திருப்பி திருப்பிக் கொத்திக் கிழிப்பதுடன் ஏனைய மாவீரர்கள் பொதுமக்களின் தியாக கங்களைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.

இறுதியாகத் தயவாகத் தெரியப்படுத்துகிறோம் இத் திரைப் படம் வெளிவர என்றுமே அனுமதிக்க மாட்டோம்.கனடா வாழ் எம் உறவுகளே ஐரோப்பாவில் கணேசன் சந்தித்த எதிர்ப்பை விட பலமடங்கு எதிர்ப்பைக் கொடுத்து , கணேசன் அவரது தவறை உணர்ந்து திரைப்படத்தினை முற்று முழுதாக அழித்துவிடுவதற்கான ஒழுங்கை மேற்கொள்வீர்களென நம்புகிறேன்.

என் தங்கையின் மானம் பறிபோவதை திரைக்கதையாக்கி இயக்கி ஒருவன் கொண்டு வருவான்,அதனை நாம் பார்த்து விட்டு அனமதி வழங்க வேண்டுமா? எந்த ஊர் நியாயம் ஐயா இது? அங்கு காட்சிகளில் வருவது இசைப்பிரியா அல்ல, வேறு ஒரு பெண் அவரைப் போல் நடித்துள்ளாள். ஆதலால் பார்க்கலாம் என்கிறாயே?! உன் மனக் குரோதம் தான் என்ன மனிதா? நீ யாரென உன் வாயாலேயே வந்துவிட்டதே…..இது வெறும் நடிப்பு என்றால் ஏன் அதை இந்தியா தடை செய்தது? வெறும் நடிப்பால் எப்படியப்பா இந்திய இலங்கை நட்புறவு பாதிக்கப்படும்? இதனை நீ இந்திய அரசிடம் கேட்டிருக்கலாமே இயக்குனர் கணேசன் அவர்களே!? நாம் சாதாரண குடும்பப் பெண்கள், எம்மால் என்ன செய்ய முடியுமென்று தானே எம்மிடம் இத்தகைய கேள்விகளை கனேடிய CMR வானொலி மூலம் கேட்டீர்கள். ஆம் நாம் சாதாரண குடும்பப் பெண்கள் தான். எம் வாழ்க்கையை நீங்கள் படமாக்க முனையாதீர்கள்.இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.எங்களை விட்டு விடுங்கள்.

தமிழீழப் பெண்களின் மானம் சிங்கள இனவெறிக் காடைகளால் அழிக்கப்பட்டது இனவழிப்பு. நான் தமிழன்,பாதிக்கப்பட்ட தமிழன் என்று கூறும் இயக்குனர் கணேசன்,அவருக்கு பலமாக இருக்கும் பிற தமிழர்களால் அதே தமிழீழப் பெண்களின் மானப் பறிப்பு படமாக்கப்பட்டு திரையேற்ற அரங்கும் ஆதரவும் தேடப்படுவது என்ன அழிப்பு?

பதில் தேடுங்கள் எம் தமிழ் உறவுகளே….

ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டுக் கதவையும் தட்டப் போகும் பிரச்சனை.

– திருமதி வாகீசன் தர்மினி.
இங்கிலாந்து.

Related Posts