சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
இசைப்பிரியா குடும்பத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விபரங்களை விளக்கியும், எதிர்வரும் 4ஆம் தேதி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவினையும் இவ் அழைப்பாணை மூலம் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்திற்கு மத்திய மாநில தணிக்கைக் குழுவினர் தடை விதித்ததற்கு எதிராக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கிலும் இசைப்பிரியா குடும்பத்தினர் தம்மை ஒருதரப்பாக இணைத்து இத்திரைப்படத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் ஒரு வழக்கினை இசைப்பிரியா குடும்பத்தினர் தொடுத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்திற்கு நிரந்தரத் தடை ஏற்படுத்தும் முனைப்புடன் செயற்படுவதாகக் கூறப்படுகிறது.
சிங்கள இராணுவத்தின் கொலைவெறியாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வெளிவருவதை தடுப்பவர்கள் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைப்பதை விரும்பாதவர்கள் அல்லது தடுப்பவர்களாகவே இருக்கமுடியும். அந்த வகையில் இவ்வாறானவர்களுடைய பின்னணியில் இசைப்பிரியா குடும்பத்தினர் செயற்படுகின்றார்களோ என்ற ஐயப்பாடு ஏற்படுகின்றது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.