புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்கும் வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவிடம், போருக்கான காரணங்கள் மற்றும் அதன் பின்புலங்கள் தொடர்பான புராதன ஆவணங்களை கையளிக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, வடமாகாண சபை உறுப்பினர்கள் 19பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நேற்று திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது.
அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. முதலாவது கூட்டத்துக்கு 12 உறுப்பினர்கள் வருகை தந்தனர். இதில் முதலமைச்சர் கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘போருக்கான காரணம், அதன் பின்புலம் உள்ளிட்ட சகல விடயங்களையும் பரிசீலனை செய்வதற்காக, அதற்கான சரித்திர ரீதியான ஆவணங்களை, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம், குழுவின் அங்கத்துவ உறுப்பினர்கள் கையளிக்கலாம்’ என்றார்.
‘இவ்வாறான பிரத்தியேக ஆவணங்களை வைத்திருக்கும் மற்றவர்கள், எனது பிரத்தியேக செயலாளரிடம் கையளிக்க முடியும். இந்த விடயத்தை செய்வதற்கு பல மாதங்கள் தேவையான போதும், நாங்கள் ஓரிரு மாதங்களுக்குள் செய்ய வேண்டியுள்ளது’ என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் முன்வைக்க வேண்டிய முன்மொழிவுகளை வரைந்து, வடமாகாண சபையில் சமர்ப்பிக்கும் இந்தக் குழு, அந்த முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு ஆலோசனையாக வழங்கும்.
இந்தக் குழுவின் இணைத் தலைவர்களாக முதலமைச்சர், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகிய இருவரும் உள்ளனர். மேலும் அமைச்சர்களான த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம்,
பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான கே.சயந்தன், அ.ரூ.பிறிமூஸ் சிராய்வா, ம.அன்டனி ஜெகநாதன், ஜி.ரி.லிங்கநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், ப.அரியரத்தினம், எம்.தியாகராசா, ஆ.பரஞ்சோதி, ஆயுப் அஸ்மின், வை.தவநாதன், அனந்தி சசிதரன். இ.ஆனோல்ட், க.சர்வேஸ்வரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.