போரில் உயிர் நீத்தோருக்காக விளக்கேற்றி அஞ்சலிப்போம்! அனைத்து தமிழர்களுக்கும் கூட்டமைப்பு அழைப்பு!!

மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக – அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,

“உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்தனை செய்வதும், அவர்களை நினைவுகூர்ந்து கோவில்களில் – வீடுகளில் – பொது இடங்களில் கூடி நின்று உறவினரும் – பொதுமக்களும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பங்கேற்பதும் அந்தந்த மதநம்பிக்கை கொண்டவர்களின் வழக்கமாகும்.

இவ்வாறான நிகழ்வுகள் மக்களின் பாரம்பரியமும் பொது நம்பிக்கையுமாகும். இழந்த தமது உறவுகளுக்காக கண்ணீர் சிந்தி அஞ்சலி செய்வது அந்த மக்களின் உணர்வும் – உரிமையும் – ஆறுதலும் ஆகும்.

இன விடுதலைக்கான போராட்டங்களின் விளைவாக இலட்சக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றோம். கூட்டம் கூட்டமாய் எம் உறவுகள், போரில் சம்பந்தப்படாதோர் கூடக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உறவுகள் ஆன்ம ஈடேற்றத்திற்கான கடமைகளை – மதநம்பிக்கைகளை நிறைவேற்ற அந்த மக்களுக்கு உரிமை உண்டு.
அதையாரும் தடை செய்ய மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

தமிழினம் அழிக்கப்படுவதிலிருந்து காப்பற்றப்பட வேண்டுமானால் அவர்கள் மொழி – நிலம் – பண்பாடு – கலைகள் – பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையாவும் இறைமையுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை நாம் யாரிடமும் இழந்துவிடவில்லை என்பதையும் நினைவு கூருவோம்.

ஒவ்வோர் ஆண்டும் மே 18 ஆம் திகதியை உயிர் நீத்தோர் நினைவு நாளாக அறிவித்துப் பிரார்த்தனையிலும், சுடரேற்றி ஆன்ம ஈடேற்றத்திற்கான மதக் கடமைகளை நிறைவேற்றியும் நாம் எல்லோரும் ஒன்று கூடி வழிபாடு செய்து வருகின்றோம். இவ்வாண்டும் மே 18 ஆம் நாள் உயிர் நீத்தோர் நினைவு நாளாகக் கருதி, ஆன்ம ஈடேற்றத்திற்காக அவரவர் மதநம்பிக்கைகள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைக ளின் அடிப்படையிலும் அந்த நாளில் விளக்கேற்றி, பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்” – என்றார்.

Related Posts