இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும், இது நல்லிணக்கத்துக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“யுத்தம் நடந்தது உண்மை. என்ன நடந்தது என்பது உண்மை. அது எங்கள் மனதிலிருந்து அகலாது. எனினும், அது நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் தடையாக அமைந்துவிடக்கூடாது. ஆகவே, நாங்கள் உண்மையை அறிவோம்.
அரசு இது தொடர்பில் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது.
முதலாவது, வடக்கு, கிழக்கில் காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய விரும்புகின்றோம். அரசு காணாமற்போனவர்கள் குறித்த அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அது நிறைவேற்றப்படும்.
தங்கள் உறவுகள் இன்னமும் உயிருடன் உள்ளனர் எனக் கருதிக்கொண்டிருக்கும் பலர் உள்ளனர். இது நாங்கள் அனுபவிக்கவேண்டிய கடினமான நடைமுறை.தென்னாபிரிக்காவிலிருந்து நாங்கள் இதனைக் கற்கவேண்டும்
இரண்டாவது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம். உண்மை, நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கவேண்டும்.
இலங்கை, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் தனக்குரிய வடிவத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது,
மேலும் சில இடங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். சில இடங்களில் அது சாத்தியமில்லை. சிலர் இறந்துவிட்டனர்.
ஒரு கட்டத்தில் யார் யாரை தாக்குகின்றார் என்பதே தெரியாத நிலை காணப்பட்டது. அவ்வேளை வடக்கு, கிழக்கில் பல தனிப்பட்ட பகைகளும் தீர்க்கப்பட்டன” என்று பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.